கோலாலம்பூர் – கடந்த புதன்கிழமை, நகரின் மையப்பகுதியிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், போதை வஸ்துகளோடு கொண்டாட்டம் நடத்திய, இளம் வயதினர் 22 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை காலை 9 மணிக்கு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வீட்டிற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைமை துணை ஆணையர் முகமது சுக்ரி காமான் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 13 வயதிலிருந்து 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் 16 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சில போதை வஸ்துக்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் அவர்கள் போதை வஸ்துக்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது.