சென்னை – மலேசியாவில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட வைகோ, சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தொலைபேசியில் தன்னை அழைத்து வருத்தம் தெரிவித்ததோடு, தன்னிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டதாகவும், நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வைகோ தூதர் திருமூர்த்தி குறித்து தொடர்ந்து கூறியதாவது:
“நான் விமான நிலையத்தில் இருந்தபோது, மாலை 5.00 மணியளவில், இந்தியத் தூதர் திருமூர்த்தி என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவரும் தமிழர்தான். எனக்கு நேர்ந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். நீங்கள் வருவதைப் பத்திரிக்கைகளில் பார்த்தேன். ஆனால் நீங்கள் இன்று வருவது எனக்கு முன்கூட்டியே தெரியாது. நீங்கள் சாப்பிடவில்லை என்று கேள்விப்பட்டேன். வீட்டிலிருந்து சாப்பிட ஏதாவது செய்து எடுத்து வரட்டுமா என அக்கறையுடன் கூறினார். ஆனால் நான் பரவாயில்லை என்று கூறிவிட்டேன். காரணம் இன்னும் சிறிது நேரத்தில் நான் மீண்டும் விமானத்திற்குள் செல்ல வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் இப்படி அக்கறையுடன் கேட்டதே எனக்கு வயிறு நிறைந்த மாதிரி இருக்கிறது என்று அவரிடம் கூறினேன். மன்னிக்கவும் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம் என்றும் திருமூர்த்தி என்னிடம் வருத்தத்துடன் கூறினார்.”
தொடர்ந்து கூறிய வைகோ, இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து நான் பிரசல்சில் பேசியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து அனைத்துலக மன்றங்களில் இலங்கைத் தமிழரின் படுகொலை குறித்த விவகாரம் எழுப்பப்பட்டுவிடக் கூடாது என்பதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.