கோலாலம்பூர் – நவீன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 5 இளைஞர்களின் குடும்பத்தினர், தங்கள் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் கிடைக்காமல் திணறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதற்குக் காரணம், இவ்வழக்கு குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் நவீன் ஓரினப்புணர்ச்சி செய்யப்பட்டார் என்ற தகவல் இருப்பதால் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்களில் ஒருவரின் தந்தை கூறியிருக்கிறார்.
“யார் சொன்னார்கள் ஓரினப்புணர்ச்சி என்று? ஏன் ஊடகங்கள் இப்படி ஓரினப்புணர்ச்சி என்று தவறானத் தகவல்களைப் பரப்புகின்றன? அவர்கள் நடந்ததைப் பார்த்தார்களா?”
“சட்டப்பிரிவு 377சி-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? எங்கிருந்து ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு வந்தது சொல்லுங்கள்?”
“மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட அதிர்ச்சியில் தான் அந்த இளைஞர் இறந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகின்றது” என்று பினாங்கு நீதிமன்ற வளாகத்தில் அவர் கூறியதாக ‘தி மலேசியன் இன்சைட்’ கூறுகின்றது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 377சி என்பது, அனுமதியின்றி இயற்கைக்கு மாறாக உடலுறவு கொள்வதாகும்.
இதனிடையே, நேற்று திங்கட்கிழமை, கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள் 4 பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.