ஜார்ஜ் டவுன் – கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சக நண்பர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட டி.நவீன் வழக்கு, பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், மூவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
2017-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி, நாள்ளிரவு 11 மணியளவில், புக்கிட் கெலுகோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் அவர்கள் நவீனை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலை குற்றமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கட்டாய மரணதண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.
இதனிடையே, இவ்வழக்கை பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அரசாங்க துணை வழக்கறிஞர் நூருல் ஃபாடின் ஹுசின் தாக்கல் செய்த மனுவை இன்று திங்கட்கிழமை விசாரணை செய்த நீதிபதி முகமது அமின் ஷாகுல், அதற்கு அனுமதி வழக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.