கோலாலம்பூர் – மலாயா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோ எம் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் தனக்கு வெளிநாட்டு மாணவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், ஆனால் இந்த விவகாரத்தை பல்கலைக்கழகம் மிகவும் அலட்சியமாகக் கையாண்டதாகவும் தனது பேஸ்புக்கில் விமர்சித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, இரவு 8 மணியளவில், துன் அகமட் குடியிருப்பு கல்லூரி விடுதி அறையில், வெளிநாட்டு மாணவர் ஒருவர் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும், தனது ஆணுறுப்பைத் தொட வைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து, 3 நாட்களுக்குப் பிறகு பல்கலைக்கழகத்தின் அனைத்துலக மாணவர் மையத்தில் (ஐஎஸ்சி) புகார் அளித்த போது, அவர்கள் சிரித்ததாகவும், பின்னர் இது குறித்து தான் பந்தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தாகவும் யோ குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், ஐஎஸ்சி தன்னை மீண்டும் அழைத்து, காவல்துறையில் அளித்த புகார் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் யோ தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே மாணவர், தாய்வானைச் சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதனை அம்மாணவர் தன்னிடம் கூறியதாகவும் யோ தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாணவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக மலேசியாகினி கூறுகின்றது.
எனினும், யோ எம், தனது பேஸ்புக்கில் கூறியிருக்கும் தகவலில், இந்த விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் அலட்சியப் போக்கை குற்றம்சாட்டியிருக்கிறார்.
மாணவரின் பாதுகாப்பை விட பல்கலைக்கழகத்தின் பெயர் தான் முக்கியம் என்று ஐஎஸ்சி இயக்குநர் சல்மி தன்னிடம் தெரிவித்ததாகவும் யோ எம் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்களது மாணவர்களை மலாயா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவர்கள் மாணவர்களின் பாதுகாப்பிற்குத் தயாராக இல்லை என்றும் யோ எம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால், பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், இந்த விவகாரத்தை பல்கலைக்கழகம் தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றது என்றும், விசாரணை முடியும் வரை தற்போதைக்கு எதுவும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.