அல்ஜீயர்ஸ் – பேஸ்புக்கில் அதிகமான ‘லைக்ஸ்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அடுக்குமாடிக் குடியிருப்பின் 15-வது மாடி ஜன்னலில் தொங்க வைத்து அதைப் புகைப்படம் எடுத்து வேடிக்கை காட்டிய ஆடவருக்கு அல்ஜீரிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.
“1000 லைக்ஸ் வேண்டும் அல்லது இவனைக் கீழே போட்டுவிடுவேன்” என்ற வாசகத்தோடு, அப்புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த அந்நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அக்குழந்தை அந்த ஆடவரின் உறவினர் மகன் என்பது தெரியவந்திருக்கிறது.
இதனிடையே, அவர் ஒரு வேடிக்கைக்காக தான் அவ்வாறு செய்தார். அதனால் அவரை மன்னித்து விடுங்கள் என்று குழந்தையின் தந்தையே நீதிமன்றத்தில் சொன்ன போதும், நீதிமன்றம் அதனை மறுத்துவிட்டது.
ஆடவரின் இச்செயல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்றும் கூறிய நீதிபதி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.