புதுடெல்லி, மார்ச் 24- உலகின் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
அரசியல், வர்த்தகம், கலச்சார பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த பிரிக்ஸ் மன்றத்தின் கூட்டம், தென்னாப்பிரிக்க தலைநகர் டர்பனில் வரும் 26, 27-ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஐந்தாவது “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வரும் திங்களன்று பிரதமர் மன்மோகன்சிங் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேசவுள்ளார்.
இந்த மாநாட்டில் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முன்னெடுக்கும் வகையில் தீர்மானங்கள் அமையும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். மேலும் மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டுக்கு எதிராகவும் அமையாது என்றும் அவர் உறுதி அளித்தார்.