பெய்ஜிங் – ஷாங்காய் நகரில் இருந்து குவாங்சோ நகரை நோக்கிப் புறப்படவிருந்த சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 380-ல், ஏறவிருந்த வயதான தம்பதி, எஞ்சினில் காசுகளை வீசி எறிந்ததால், அவ்விமானம் சுமார் 5 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஷாங்காய் பூடோங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த அவ்விமானத்தில் ஏறும் போது அந்த வயதான தம்பதி காசுகளை வீசி எறிந்ததைப் பார்த்த மற்ற பயணிகள், உடனடியாக விமானப் பணியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, உடனடியாக தொழில்நுட்ப குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தொழில்நுட்பப் பிரிவினர், விமானத்தின் எஞ்சினில் இருந்து அத்தம்பதி வீசியெறிந்த காசுகளை வெளியே எடுத்தனர்.
இதனால் சுமார் 5 மணி நேரம் அவ்விமானம் தாமதமாகப் புறப்பட்டது.
இந்நிலையில், அத்தம்பதியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், அதிருஷ்டத்திற்காகவும், விமானம் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் காசுகளை எஞ்சினில் போட்டதாகத் தெரிவித்தனர்.