Home Featured நாடு “மலேசிய ஜனநாயகத்திற்காக சிறையில் இருக்கின்றேன்” – பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அன்வார் கடிதம்!

“மலேசிய ஜனநாயகத்திற்காக சிறையில் இருக்கின்றேன்” – பிரிட்டிஷ் பத்திரிக்கைக்கு அன்வார் கடிதம்!

501
0
SHARE
Ad

Anwar Ibrahim

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு ஜனநாயகம் மிகவும் தேவைப்படுகின்றது, அந்த நம்பிக்கைக்காகத்தான் நான் சிறையில் இருக்கின்றேன் – இருந்தாலும் எனது நம்பிக்கைகளை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரிட்டிஷ் பத்திரிக்கையான ‘தி கார்டியன்’ பத்திரிக்கைக்கு எழுதியுள்ள கடிதத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ‘தி கார்டியன்’ நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13 டிசம்பர் 2016) தனது இணையப் பதிப்பில் வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

தனக்கு எதிராக வழங்கப்பட்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அன்வார் இப்ராகிம் தொடுத்திருந்த விண்ணப்பத்தை நேற்று 5 நீதிபதிகள் கொண்ட கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு ஒருமனதாக தள்ளுபடி செய்திருந்தது. அதற்கு ஒரு நாள் முன்பாக இந்தக் கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.

அன்வார் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்

anwar-ibrahimஅண்மையக் காலமாக உலக அளவில் நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களால் ஜனநாயகத்திற்கு தவறான அவப் பெயர் ஏற்பட்டுள்ளது எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில், மக்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பேற்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என  அன்வார் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

“மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் இன்னும் சரியாகப் பின்பற்றப்படாத நிலையில், இந்தோனிசியாவின் வெற்றியும் மலேசியா அடைந்த முன்னேற்றமும் முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட நாடுகளுக்கிடையில் அந்த இரண்டு நாடுகளின் மீதும் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சின. ஆனால் எனது அரசியல் ரீதியான சிறைவாசத்திலிருந்து, தெரிந்து கொள்ள முடிந்தது என்னவென்றால், நமது நாடு முழுமையான ஜனநாயக எல்லைகளை அடைய வேண்டுமானால், இன்னும் அதிக அளவிலான அனைத்துலக ஊக்குவிப்பும், அழுத்தம் தரும் போக்கும் வேண்டும் என்பதுதான்” என அன்வார் இப்ராகிம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லீம் உலக நாடுகளுக்கு மத்தியில் மிகப் பிரகாசமான முன்னேற்றத்தைக் கொண்டிருந்த நாடாக மலேசியா திகழ்ந்தது என்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், ஜனநாயக நடைமுறைகளை சீர்ப்படுத்துவதையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தியதன் மூலம் நாம் மற்ற முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தோம் என்றும் அன்வார் கூறியுள்ளார்.

“ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் நமது நாடு அரசியல், பொருளாதார ரீதியாக மேலும் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். ஆளும் தரப்பினர் தங்களின் ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக, நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தங்கள் செயல்பாடுகளில் சமரசம் செய்து கொள்வதையும், ஆண்டுதோறும் நமது நடைமுறைகள் அதிகார முறைகேடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதையும் கண்டு வருகின்றோம். ஆனால், நமது மக்களோ மறுமலர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதும், ஜனநாயக ரீதியான பொறுப்பேற்கும் தன்மைக்கு மாறுவதும்தான் நமது முன்னேற்றத்திற்கான வழியாகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். 2013 பொதுத் தேர்தலில் நான் தலைமை தாங்கி வழிநடத்திய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 52 சதவீத பெரும்பான்மை வாக்குகளை அளித்து பெரும் ஊக்கத்தை மக்கள் வழங்கியதிலிருந்து இதனை நாம் ஆதாரமாகப் புரிந்து கொள்ளலாம்” என்றும் அன்வார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“தூய்மையான அரசாங்கத்திற்காக நடத்தப்பட்ட பெர்சே பேரணிகளும் மக்களின் உணர்வுகளை நமக்கு புலப்படுத்தியுள்ளன என்றாலும் அம்னோ தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டவாதிகளுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் எதிராக தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கும் போக்கும், கைதுகள், தடுப்புக் காவல்கள் மூலம் நெருக்குதல்கள் கொடுப்பதும் அதிகரித்து வருகின்றன என்பது கவலைக்குரியதாகும்” என்றும் அன்வார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

the-guardian-image

தி கார்டியன் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில் அன்வார் தொடர்ந்து பின்வருமாறு எழுதியுள்ளார்:-

“சுதந்திரம் பெற்றது முதல் இடைவிடாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தாலும், நாட்டின் 95 சதவீத தகவல் ஊடக சொத்துக்களைக் கொண்டிருப்பதோடு, மத்திய காவல் துறையையும், நீதித் துறையையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் மலேசிய அரசாங்கம் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தைக் கொண்டிருக்கின்றது. அதிகாரத்தில் உள்ளவர்களின் வரலாற்றுபூர்வ ஊழல், அனைத்துலக அளவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் 1எம்டிபி விவகாரத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்க நீதித் துறை இலாகாவின் வரலாற்றில் இதுவரை காணாத மிகப் பெரிய ஊழலாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள விவகாரமாகவும் 1 எம்டிபி திகழ்கின்றது.”

மகாதீர் இணைந்ததால் நம்பிக்கையோடு இருக்கின்றேன்

anwar-ibrahim-mahathir

நமது நாட்டின் எதிர்காலம் குறித்தும், நமது குடிமக்களின் வெற்றி குறித்தும் நான் இன்னும் நம்பிக்கையோடு இருக்கின்றேன். காரணம் நடப்பு எதிர்க்கட்சிக் கூட்டணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும் இணைந்துள்ளார். இதன் காரணமாக, அவரது சகாக்கள் பலர் அம்னோவிலிருந்து தற்போது விலகி நம்முடன் இணைந்துள்ளனர். நாடெங்கிலும் எழுந்துள்ள மாபெரும் எதிர்ப்புகளை அடக்குவதற்காக, அதிகாரத்திலுள்ளவர்கள் அடக்குமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளதாலும், நம்பிக்கையற்ற பதட்டத்துடன் செயல்படுவதாலும், நாடு மேலும் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பொது விவாதங்கள் குற்றங்களாக்கப்படுகின்றன. இன, மத நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. நமது நாட்டிலிருந்து அதிக அளவில் ஐஎஸ் இஸ்லாமிய போராட்டத்திற்காக போராளிகள் செல்கின்றனர் என்பதிலிருந்து மத தீவிரவாதம் நம்மிடையே அதிகரித்துள்ளதை உணரலாம்.

17 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் எனது அரசியல் சகாக்களும் அதிகார அடக்குமுறைக்கு எதிராக ‘ரிபோர்மாசி’ (மறுமலர்ச்சி) என்ற முழக்கத்துடன் ஓர் இயக்கத்தைத் தொடங்கினோம். பல இன அரசியல் களம் காணவேண்டும் என்பதோடு, மறுமலர்ச்சி, அனைவரையும் அரவணைத்தல், நீதியை நிலைநாட்டுதல் போன்ற கனவுகளோடு தொடங்கப்பட்டது அந்தப் போராட்டம்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பார்க்கும்போது அந்த இயக்கம் துடிப்பான, யாராலும் அசைக்க முடியாத ஓர் எதிர்க்கட்சிக் கூட்டணியாக உருவெடுத்திருக்கின்றது.

இன்றைய சூழலில் மலேசியா தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் சிக்கிக் கொண்டிருக்கின்றது. ஒன்று, மீண்டும் சரியான பாதையில் திரும்பி, வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையில் அரசியல், பொருளாதார ரீதியான நம்பிக்கை நட்சத்திர நாடாக உருவெடுக்கலாம். அல்லது ஜனநாயகம் மற்றும் பொருளாதார ரீதியாக தோல்வியுற்ற மற்றொரு முஸ்லீம் பெரும்பான்மை நாடாக உருமாறலாம். மலேசியாவில் அடிப்படை ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுவதற்கு அனைத்துலக அளவிலான ஆதரவு வழங்கப்படுவதன் மூலம் உலகத்துக்கு முன்மாதிரியாகத் திகழும் தென்கிழக்கு ஆசிய முஸ்லீம் அரசாங்கங்களைக் கொண்ட நாடுகளின் அமைப்பு உருவாக்கப்படலாம்.

வழக்கின் தீர்ப்பை நம்பிக்கையோடு எதிர்நோக்குகின்றேன்

எனது வழக்கின் மறு ஆய்வு மீதான இறுதித் தீர்ப்பு இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கின்றேன். என் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகள் இரத்து செய்யப்படும் என நம்புகின்றேன். எனது சிறைவாசம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்றும் பிரார்த்தனை செய்கின்றேன். ஐக்கிய நாடுகள் மன்றம், அனைத்துலக பொதுமன்னிப்பு கழகம், மனித உரிமைஅமைப்புகள் போன்றவை எனது விடுதலைக்காக வேண்டுகோள் விடுத்துள்ளன.

மீண்டும் நான் சுதந்திர மனிதனாக வெளிவந்து உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன்.

இந்த வட்டாரத்திற்கு மீண்டும் மலேசியா தலைமையேற்பதற்கான அனைத்து அம்சங்களும் நமது நாட்டுக்கு மிகச் சரியாகப் பொருந்தியுள்ளன என நான் நம்புகின்றேன். நமது நாட்டின் உண்மையான நண்பர்கள் பாடுபட்டால் நமது நாடு தவறான பாதைக்கு சென்று விடாது என்றும் நம்புகின்றேன். அவ்வாறு சென்றுவிட்டால் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு விரைவாகத் திரும்புவது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாகி விடும்.

முஸ்லீம் ஜனநாயகவாதிகளின் உலக மாநாட்டை 2014-இல் முதன் முதலாக நடத்தியவன் என்ற முறையில், சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, பொறுப்பேற்கும் தன்மை ஆகியவைதான் மலேசியாவுக்கும் அனைத்து முஸ்லீம் உலகத்துக்குமான சரியான பதில்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

ஜனநாயகம் என்பது நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான மிகப் பொருத்தமான தீர்வாக இருக்க முடியாதுதான். ஆனால், நம் முன் இருக்கும் மற்ற தீர்வுகளை விட அதுவே சிறந்த தீர்வாகும்.”

அன்வார் இப்ராகிம் ‘தி கார்டியன்’ பத்திரிக்கைக்கு எழுதியுள்ள அந்த ஆங்கிலக் கடிதத்தின் முழு வடிவத்தை கீழ்க்காணும் செல்லியல் இணைப்பில் காணலாம்:

“Malaysia needs democracy. I’m in prison for that belief – but I won’t change it”- Anwar Ibrahim