Home Featured வணிகம் 1எம்டிபி: 2வது வங்கி அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

1எம்டிபி: 2வது வங்கி அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார்!

670
0
SHARE
Ad

1mdb-jho-low

சிங்கப்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் பல முனைகளில் நீதிமன்ற விசாரணைகளை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கி நடத்தி வரும் வேளையில், யுவோன் சியா இயூ ஃபூங் என்ற மற்றொரு பிஎஸ்ஐ என்ற தனியார் வங்கி அதிகாரியும் இன்று வெள்ளிக்கிழமை தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.

45 வயதான சியா, சிங்கை நீதிமன்றத்தில் தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். 1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் மலேசிய முதலீட்டாளர் லோ தெக் ஜோ தொடர்பில் சந்தேகத்திற்குரிய வங்கிப் பரிமாற்றங்களை சிங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாத காரணத்திற்காக அவர்மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டது.

#TamilSchoolmychoice

சியாவுக்கு இரண்டு வார கால சிறைவாசம் வழங்கப்பட வேண்டுமென அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சியாவின் மூத்த அதிகாரியும் மேற்பார்வையாளருமான யாக் இயூ சீ, இதே போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அந்தக் குற்றங்களை ஒப்புக் கொண்டு தற்போது 18 வார சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

57 வயதான யாக் மீது 24,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர் முறைகேடான பரிமாற்றங்களின் மூலம் சம்பாதித்த 7.5 மில்லியன் சிங்கப்பூர் டாலரையும் அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.

மற்றொரு பிஎஸ்ஐ வங்கி பணியாளரான இயோ ஜியா வெய் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார். சாட்சியாளர்களை திசை மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்திற்காக அவர் மீது கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுத் தொடர்பு நிர்வாகியான இயோ 1எம்டிபி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்படும் 3-வது நபராவார்.

1 எம்டிபி விவகாரத்தின் காரணமாக பிஎஸ்ஐ வங்கி கடந்த மே மாதத்தில் சிங்கையில் மூடப்பட்டது. மற்றொரு வங்கியான ஃபால்கன் வங்கியும் மூடப்பட்டது.