புதுடில்லி – பண நோட்டுகள் செல்லாது என்ற சர்ச்சையைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீது சரமாரியாக குற்றம் சாட்டி வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று தனது கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் நேருக்கு நேர் சந்தித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை முடக்கி காங்கிரஸ் கட்சியினர் அமளியை ஏற்படுத்தி வந்தனர். மோடியின் தனிப்பட்ட ஊழல் விவகாரம் ஒன்று தன் கைவசம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்த ராகுல், அதனை நான் பகிரங்கப்படுத்தினால் நாட்டில் பூகம்பம் வெடிக்கும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் மோடியைச் சந்தித்த ராகுல் காந்தி தனது உத்தரப் பிரதேச பயணங்களின் போது சேகரித்த முறையீடுகளை மோடியிடம் சமர்ப்பித்தார். குறிப்பாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை அவர் பிரதமர் முன் வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.