Home Featured தமிழ் நாடு “என்னையும் அத்தை ஜெயலலிதாவையும் பிரித்து வைத்தார்கள்” தீபா ஜெயகுமார் அதிரடிப் பேட்டி

“என்னையும் அத்தை ஜெயலலிதாவையும் பிரித்து வைத்தார்கள்” தீபா ஜெயகுமார் அதிரடிப் பேட்டி

867
0
SHARE
Ad

deepa-jayakumar-rangaraj-pande-thanthi-tv-interviewசென்னை – அதிமுக கட்சியின் அனைத்துத் தரப்புகளும் ஒரே மனதாக, கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக சின்னம்மா சசிகலா வரவேண்டும் என வரிசையாக படையெடுத்து வேண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நெருடலாக ஒரு முக்கிய முனையிலிருந்து எதிர்த் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர் தீபா ஜெயகுமார் – ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள்.

தமிழகத்தின் பிரபல செய்தித் தொலைக்காட்சியான தந்தி தொலைக்காட்சியில், அந்த அலைவரிசையின் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே, “கேள்விக்கென்ன பதில்” அங்கத்தில் தீபாவுடன் நடத்திய   இடம் பெற்ற நேர்காணலின் சில காட்சிகள் கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சியில் இடையிடையே காட்டப்பட்டன.

பாண்டே கிடுக்கிப் பிடி போட்ட கேள்விகளுடன் கூடிய அந்த நேர்காணல் கடந்த 16 மற்றும் 17 டிசம்பர் தேதிகளில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புகள் வெளியானவுடன் தமிழகமே பரபரப்பானது. காரணம், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீபா பகிரங்கமாக வழங்கப்போகும் முதல் நேர்காணல் இது என்பதால்தான் அந்தப் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

#TamilSchoolmychoice

ஆனால், அறிவிக்கப்பட்டபடி குறிப்பிட்ட நேரத்தில் அந்த நேர்காணல் ஒளிபரப்பப்படவில்லை – ஏன் இரத்து செய்யப்பட்டது என்ற முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் களத்தில் குதித்தனர் இரசிகர்கள். நட்பு ஊடகங்களில் தங்களின் கருத்துகளைக் கொட்டித் தீர்த்தனர். தீபாவின் நேர்காணல் ஏன் ஒளிபரப்பப்படவில்லை என்ற கேள்விகளோடும், சசிகலாவின் நேரடித் தலையீட்டால்தான் தீபாவின் நேர்காணல் இரத்து செய்யப்பட்டது என்ற ஆரூடங்களும் கூறப்பட்டன.

என்ன காரணமோ தெரியவில்லை! தீபாவின் நேர்காணல் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்புகள் மீண்டும் தந்தி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டன. அதன்படி நேற்று திங்கட்கிழமை இரவும் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மறு ஒளிபரப்பாகவும் தீபாவின் அந்த சர்ச்சைக்குரிய நேர்காணல் தந்தி தொலைக்காட்சியில் இடம் பெற்றது.

deepa-jayakumar-thanthi-tv-interview

தீபா வெளியிட்ட முக்கிய விவரங்கள்

தீபா ஜெயகுமாரின் அந்த நேர்காணலில் இடம் பெற்ற சில முக்கிய விவரங்கள்:

  • நான் பிறந்தவுடன் என்னை வளர்க்க வேண்டும் என ஜெயலலிதா விரும்பினார். எங்கள் குடும்பத்தில் அனைத்து தேவைகளையும் அவரே முன்னின்று செய்து வந்தார்.
  • 1995-ஆம் ஆண்டு வரை நான் எனது அத்தையுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளேன். 1995-ஆம் ஆண்டில் சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியது முதல் அவருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையில் விரிசல் விழுந்தது. என்னை வளர்க்க விரும்பிய அவர், சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்ததால், எங்கள் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை.
  • அதற்குப் பின்னர் ஜெயலலிதா வீட்டில் அவருடன் இருந்தவர்கள் என்னை எனது அத்தையுடன் நெருங்க விடாமல் தடுக்க முற்பட்டார்கள்.
  • சுதாகர் திருமணம் முடிந்து சுமார் 1 மாதத்தில் எனது அப்பா இறந்து விட்டார். மறைவு செய்தி கேட்டு ஜெயலலிதா வீட்டுக்கு வந்து செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுத்தார்.
  • பின்னர் அவர் சிறைக்கு சென்றபோது நான் குடும்பத்துடன் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்போதெல்லாம் என்னுடன் நன்றாகவே பழகினார். இங்கே யார் வரச் சொன்னது, நானே வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என்று கூறியவர், அங்கிருந்தவர்களிடம் இதுதான் என் அண்ணன் மகள் என பாசத்துடன் அறிமுகப்படுத்தினார்.
  • எனது திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரே செய்தார். ஆனால் இறுதி நேரத்தில் ஏனோ வரவில்லை.
  • அதன் பின்னர் 2012-இல் மீண்டும் நான் அவருடன் நெருக்கமானேன். வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தேன். போனமுறை வந்த போதெல்லாம் நான் தடுக்கப்பட்டேன் என்று கூறியதும், அவரது உதவியாளரை அழைத்து ஏன் நான் வந்தது குறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை என கண்டிக்கவும் செய்தார்.
  • அவர் பெங்களூர் சிறையில் இருந்தபோதும் அவரை நான் பார்க்கச் சென்றேன். ஆனால் அங்கிருந்த சூழ்நிலைகளால் அவரைப் பார்க்க முடியவில்லை.
  • ஜெயலலிதா என்னுடனும், எனது குடும்பத்தினருடனும் நெருக்கமாகத்தான் இருந்தார். ஆனால், அவரைச் சுற்றியிருந்தவர்கள் எங்களை அவருடன் நெருங்க விடவில்லை.
  • அவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோதும் அவரைப் பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. அதனால், அப்போலோ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நான் வாக்குவாதமும் செய்திருக்கின்றேன்.
  • தான் அதிமுக உறுப்பினர் இல்லை என ஒப்புக் கொண்ட தீபா, இருந்தாலும் தனது அத்தை வழியில் தானும் அரசியலில் முக்கிய பங்காற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
  • ரங்கராஜ் பாண்டேயின் கேள்விகளின் மூலமும், தீபாவின் பதில்களின் மூலமும், தீபாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் மற்ற சில பிரச்சனைகள் இருந்தது நேர்காணலில் மறைமுகமாக தெரிந்தது.
  • ஜெயலலிதா போன்ற ஒரு வலிமையான ஆளுமை கொண்ட முதலமைச்சர் – சசிகலாவையே வீட்டிலிருந்து வெளியேற்றியவர் – தீபாவை மற்றவர்கள் சொல்லியதால் ஒதுக்கி வைத்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என பாண்டே கேட்டதற்கு, தீபா  சுற்றியிருந்தவர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள் என்றே மீண்டும் மீண்டும் கூறினார்.
  • ஆனால், தீபாவின் சகோதரர் தீபக் சசிகலாவுடன் நெருக்கமாக இருக்கிறாரே – சசிகலாவை அத்தை என அழைக்கிறாரே – அது மட்டும் ஏன் எனக் கேட்டதற்கு அதற்கு தீபாவால் சரியாக பதிலளிக்க முடியவில்லை.தீபக்கை அவர்கள் தங்களுடன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள் என்று மட்டும் கூறி மழுப்பினார்.
  • ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த மேலும் தெளிவான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் தீபா கூறினார். மருத்துவமனை அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும், சிகிச்சை குறித்து சசிகலா தரப்பில் ஏன் விளக்கங்கள் எதுவும் தரப்படவில்லை என்றும் தீபா கேள்வி எழுப்பினார்.
  • ஓர் அரசியல் கட்சியை நடத்த முடியுமா என்ற கேள்விக்கு என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றும் தீபா தெரிவித்தார்.

தீபாவின் நேர்காணலைத் தொடர்ந்து, தமிழக மக்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள், ஊடகங்களின் கவனம் அவரது பக்கம் திரும்பியுள்ளது. அடுத்து தீபா இரண்டு முனைகளில் நடவடிக்கைகளில் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலாவது, ஜெயலலிதா மறைவால் விரைவில் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில், தீபா போட்டியில் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இரண்டாவதாக, ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த விவகாரத்தில், அவர் உயில் எதனையும் எழுதி வைத்திருந்தாரா என்பது இதுவரை தெரியாத நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது உரிமை கோரி நீதிமன்றப் போராட்டம் ஒன்றை தீபா தொடக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

-செல்லியல் தொகுப்பு