Home Featured நாடு “இன, மத, பாகுபாடுகளுக்கு அம்னோதான் காரணம்” – ரிசால் மரிக்கானுக்கு இராமசாமி பதிலடி

“இன, மத, பாகுபாடுகளுக்கு அம்னோதான் காரணம்” – ரிசால் மரிக்கானுக்கு இராமசாமி பதிலடி

888
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியில் உணவகம் நடத்திக் கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் என்பவரின் குத்தகை இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இதனை மதப் பிரச்சனையாக்க வேண்டாம் என துணை வெளியுறவு அமைச்சர் ரிசார் மரிக்கான் எச்சரித்ததைத் தொடர்ந்து, இராமசாமியும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“நாட்டில் இன, மத பாகுபாடுகள் புரையோடிப் போயிருப்பதற்கு 60 ஆண்டுகால அம்னோவின் ஆட்சிதான் காரணம்” என்றும் இராமசாமி ரிசால் மரிக்கானைச் சாடியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“போலிடெக்னிக் நிர்வாகத்தைச் சந்தித்து விளக்கம் பெறாமல், ஏன் நான் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினேன் என என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் ரிசாலை நானும் கேட்கிறேன். போலிடெக்னிக் நிர்வாகத்தை அணுகி உண்மை நிலவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாகக் கூறும் நீங்கள், அதே போன்று ஏன் கோபி கிருஷ்ணனையும் அணுகி அவர் தரப்பு நியாயத்தையும் கேட்கவில்லை? அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஏன் விசாரிக்கவில்லை? அப்படியானால், போலிடெக்னிக் நிர்வாகம் கூறுவது மட்டும்தான் உண்மை என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?” என்றும் இராமசாமி ரிசாலிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ரிசாலுக்கு எதிரான தனது மறுப்பு அறிக்கையை இராமசாமி தனது முகநூல் பக்கத்தில் நேற்று சனிக்கிழமை பதிவு செய்தார்.

ரிசால் மரிக்கான் (படம்) பினாங்கு மாநில அம்னோ தொடர்புக் குழுவின் துணைத் தலைவருமாவார்.

நமது நாட்டில் இதுபோன்ற நிலைமைகள் இருப்பதற்கு 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அம்னோதான் காரணம் என்றும் குற்றம் சாட்டியிருக்கும் இராமசாமி, அதன் காரணமாக இன, மத ஆதிக்கம் பொதுக் கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து மலேசிய சமுதாயங்களிலும் ஊடுருவி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். நாட்டில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் பதட்டங்களை உருவாக்க அம்னோவும் தேசிய முன்னணியும் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை மூடி மறைக்க எவ்வளவுதான் வெள்ளைச் சாயம் கொண்டு அடித்தாலும் அதை மறைக்க முடியாது என்றும் இராமசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பின்வரும் கேள்விகளையும் இராமசாமி அடுக்கடுக்காகத் தனது அறிக்கையில் எழுப்பியிருக்கிறார்:

  • இஸ்லாமிய முறைப்படியான சமையல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை கோபி கிருஷ்ணன் பூர்த்தி செய்யவில்லை என்றால் ஏன் அவருக்கு இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்கவில்லை?
  • பொதுமக்கள் பார்வைக்கு வந்ததும் உடனடியாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டி போலிடெக்னிக் நிர்வாகம் உடனடியாக ஏன் விளக்கம் அளிக்கவில்லை?
  • போலிடெக்னிக் இயக்குநர் ஏன் பத்திரிக்கையாளர்களிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் முகம் காட்டாமல் மறைந்திருந்தார்?
  • போலிடெக்னிக் நிர்வாகம் செய்த தவறுகளைத் தற்காக்க, அதன் இயக்குநர் ஏன் மஇகாவினரைப் பயன்படுத்தப் பார்க்கிறார்?

“நான் ஏன் போலிடெக்னிக் நிர்வாகத்தை அணுகி விளக்கம் பெறவில்லை என ரிசால் என்னைப் பார்த்துக் கேட்கிறார். அவருக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் அப்படி நான் செய்திருந்தால், இதுபோன்ற பொதுக் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் வெளி நபர்களுடன் பேசக் கூடாது என கல்வி அமைச்சு விதித்திருக்கும் உத்தரவைச் சுட்டிக் காட்டி என்னிடம் பேசுவதைத் தவிர்த்திருப்பார்கள்” என்று கூறும் இராமசாமி தொடர்ந்து,

“ரிசாலிடம் ஒரே ஒரு உதவியைக் கேட்க விரும்புகிறேன். நாட்டில் எத்தனை போலிடெக்னிக் கல்லூரிகள் இருக்கின்றன என்ற பட்டியலையும், அவற்றில் எத்தனை முஸ்லீம் அல்லாத உணவகங்கள் (கேன்டீன்) இருக்கின்றன என்ற பட்டியலையும் தாருங்கள். பினாங்கு மாநிலத்திலேயே முஸ்லீம் அல்லாத உணவகங்களுக்கு போலிடெக்னிக் கல்லூரிகளில் வாய்ப்பில்லை என்றால், மற்ற மாநிலங்களில், குறிப்பாக, அம்னோ/தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

“ரிசால் கூறுவது போல் தான் 25 ஆண்டுகளாக அரசாங்கத்தின் உயர் கல்விக் கூடங்களில் விரிவுரையாளராக இருந்தது உண்மைதான் – அதனால்தான் அங்கு விரிவுரையாளர்கள் நியமனம் முதல் துணைவேந்தர்கள், துறைத் தலைவர் நியமனங்கள் போன்ற விவகாரங்களில் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் நியமனங்கள் செய்யப்படுவதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். இது தெரிந்திருந்தும், இதனால் பெருமைக்குரிய நமது உயர்கல்விக் கூடங்களில் இருந்து வரும் மோசமான தோற்றத்தை அறிந்திருந்தும் ரிசால் தெரியாதவர் போல் கண்களை மூடிக் கொண்டு பேசக் கூடாது” என்றும் இராமசாமி சாடியுள்ளார்.

“இறுதியாக கோபி கிருஷ்ணனுடன் நான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் கூறியது அனைத்தும் உண்மை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பொதுக் கல்விக் கூடங்களில் இன, மத ரீதியான பாகுபாடுகள் அதிக அளவில் பரவிக் கிடக்கிறது. நமது சமுதாயத்தின் பல பிரிவுகளிலும் பரவிக் கிடக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அம்னோ/தேசிய முன்னணியால் ஏற்பட்ட இந்த நிலைமையை மறைப்பதற்கு அம்னோ/தேசிய முன்னணி என்னதான் முயற்சி எடுத்தாலும் அது நடக்காது. இதனால்தான் நமது நாட்டில் ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என நான் கருதுகிறேன்” எனத் தனது அறிக்கையை இராமசாமி நிறைவு செய்திருக்கிறார்.