சுங்கைப்பட்டாணி – எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இங்குள்ள சிந்தா சாயாங் தங்கும் விடுதியில் புத்தமத நாகரிகம் குறித்த தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
புத்தமதம் எவ்வாறு இந்த நாட்டிலும் மற்ற சுற்று வட்டார நாடுகளிலும் எவ்வாறு பரவியது என்பது குறித்த ஆய்வுகளும், புத்த மதத்தின் கலாச்சார, வரலாற்று பூர்வ அம்சங்கள் எவ்வாறு நமது நாட்டிலும், மற்ற நாடுகளிலும் பதிந்திருக்கின்றன என்பது குறித்த ஆய்வுகளும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பல முன்னணி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதோடு, ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கின்றனர்.
கெடாவில் இராஜ இராஜ சோழனின் ஆதிக்கம் குறித்தும் கடாரம் குறித்தும் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவரும், நூல் எழுதியவருமான வழக்கறிஞர் டத்தோ வி.நடராஜனும் இந்த புத்த மத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.