Home நாடு பௌத்தத் துறவிகளுக்கு விசா நெருக்கடி – வேதமூர்த்தி தீர்வு காண்பார்

பௌத்தத் துறவிகளுக்கு விசா நெருக்கடி – வேதமூர்த்தி தீர்வு காண்பார்

954
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – வெளிநாடுகளைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் மலேசிய விசாவைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா, தாமான் மேகாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்ற பௌத்த சிறப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அமைச்சரிடம் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்துத் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாட்டில் உள்ள நுழைவாயில் முனையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள குடிநுழைவுத் துறை அதிகாரிகள், புத்தத் துறவிகளிடம் நிதி ஆதாரம், தங்குமிடம் குறித்த ஆதாரத்துடன் மற்ற ஆவணங்களையும் கோருவதாகத் தெரிகிறது. தவறான புரிதல் காரணமாக இப்படி நடைபெறலாம்.

#TamilSchoolmychoice

“ஆனாலும், ஒரு வெளிநாட்டு பௌத்தத் துறவி தன்னிடம் எந்த பணமும் இல்லை என்பதற்காக எல்லையிலேயே இருநாட்கள் தடுத்து வைக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றிருக்கக் கூடாது. காரணம், பௌத்தத் துறவியர் வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலும் கையில் பணத்தைக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக வட்டார பௌத்த அமைப்புகளின் உதவியுடன் செயல்படுவது அவர்களது வழக்கம்” என்றும் வேதமூர்த்தி தனதுரையில் குறிப்பிட்டார்.

இது குறித்து உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுடன் பேச இருப்பதாகக் குறிப்பிட்ட வேதமூர்த்தி, இந்தச் சிக்கல் குறித்து அரசு பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.