“உலகத் தமிழ் இணைய மாநாடு கனடாவிலா? மலேசியாவிலா?” என்ற செல்லியலின் செய்திக் கட்டுரையைத் தொடர்ந்து, நாம் குறிப்பிட்டது போன்று மலேசியாவில் தமிழ் இணைய மாநாட்டை நடத்தும் மலேசியாவின் “உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம்” என்ற அமைப்பின் தலைவர் தனேசு பாலகிருட்டிணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையை இங்கே எந்தவிதத் திருத்தங்களும் இன்றி முழுமையாகப் பதிவேற்றம் செய்திருக்கிறோம்:
“மொழியும் இணையமும் சங்கமிக்கும் இடமே தமிழிணையம். தொழில்நுட்பத்திற்காக மொழியா? மொழிக்காகத் தொழில்நுட்பமா? என்ற வினா பல்வேறு சூழலில் பல்வகையில் சிந்திக்கவைக்கின்றது. தமிழ்இணைய மாநாடு நடத்துவதற்கு தமிழ் மீது மாறாப் பற்று உடையவர்களாய் இருந்தாலே போதும். தமிழை அழகுப்பேழைக்குள் பூட்ட நினைத்தனர் சிலர். இன்று தொழில்நுட்ப வலைக்குள் சிக்கவைத்துத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைக்க எண்ணுகின்றனர். எத்திசையும் புகழ் மணக்கும் தமிழணங்கை சிறுவட்டத்திற்குள் அடக்குதல் எளிதன்று. மண்ணை முட்டிமுட்டி செயித்த விதைகள் தாம் மரமாகும். சிறு அமைப்பு தான் பெரிய செயலுக்கு வித்தாகும்.
கவனிக்க, தொழில்நுட்பத் துறையில் ஒரு நுட்பம் எங்கும் எப்போதும் பேசுவதுண்டு. யாதெனில், உச்சத்தை நோக்கி செல்லும் வேகத்திற்கிணங்க வீழ்ச்சியை நோக்கி இறங்குவது தொழில்நுட்பத்தில் உண்டு. பலர் இதனை மறந்துவிடுகின்றனர்…
ஆய்வு என்பது தொடர்ஓட்டம் என்பது ஆய்வுலகினர் அனைவரும் அறிந்ததே. ஓடியவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருப்பதும் மற்றவர்களின் ஓட்டத்திற்கான முன்னாய்வுப்பாதையை இருளாக்க எண்ணுவதும் தாங்கள் மட்டுமே ஆய்விற்குத் தகுதியுடையவர்கள் மற்றவர்களின் தகுதியை நிர்ணயிப்பதற்கான அளவுகோலையும் தாங்களே வடிவமைப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணமும் ஆய்வுலகில் அதிகமாகிவிட்டது.
மலேசியாவிற்கு எது கறை? எது இழுக்கு? தமிழர்களும் தமிழறிஞர்களும் தமிழ்இதழாசிரியர்களும் பேராசிரியப் பெருமக்களும் வணக்கத்திற்குரிய பள்ளி ஆசிரியர்களும் இளம்ஆய்வாளர்களும் மாணவர்களும் இணைந்து தமிழிணைய மாநாடு நடத்துவதா?
மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ச் சான்றாண்மை மிக்கவர்களே! தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் நன்மைநாடி தொழில்நுட்பம் பேணி மாநாடு நடத்துவதற்குச் சிலர் மட்டுமே மட்டுமே தகுதியுடையவர்கள் என்றும் மற்றவர்கள் நடத்தினால் அது மலையகத்திற்கு இழுக்கு என்றும் கருதுபவர்களின் சிந்தை வேடிக்கைக்குரியது.
ஊர் கூடி இழுத்தால் தான் தேரோடும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுபவர்களை வேடிக்கை மனிதர்கள் என்பர் தமிழர். நற்றமிழ் இலக்கியம் போற்றும் தமிழ் அமைப்பு தமிழ் மொழியின் தொழில்நுட்பம் குறித்து மாநாடு நடத்துவதற்கு எவ்விதம் இழுக்கை ஏற்படுத்துவதாகும். சிறுமையும் பெருமையும் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுவன. தமிழர்கள் கூடி மாநாடு நடத்துவது மலையகத் தமிழருக்கும் தமிழன்னைக்கும் பெருமையே.
உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் – அறிமுகம்:
தமிழரின் தொன்மையையும் உயர் தனிச் சிறப்பினையும் விளக்கும் இலக்கியங்களாகத் தமிழ்க் காப்பியங்கள் திகழ்கின்றன. கன்னித்தமிழ்க் காப்பியங்களை உலகறியச் செய்யும் நோக்கில் செயல்பட்டுவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் மலேசியாவைத் தலைமையிடமாய்க் கொண்டு இயங்கி வருகின்றது. அமெரிக்கா, இந்தியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு காப்பியப் பணியாற்றி வருகின்றது. பழந்தமிழ்க் காப்பியங்களின் சுவடிகள், பதிப்புகள், உரைகள், ஆய்வு நூல்கள், ஆய்வேடுகள் முதலியவற்றை மின்னிலக்கமாக்கும் நோக்கில் “காப்பியகம்” என்னும் அமைப்பையும் காப்பியங்களின் ஆய்வுச் சிந்தனைகளைத் தாங்கிய பன்னாட்டுக் காலாண்டிதழைக் “காப்பியம்” என்னும் பெயரிலும் தொடங்கியுள்ளது.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க் காப்பியங்களை உலக இலக்கியங்களாக உயர்த்தும் நோக்கில் தொடர்ந்து உலகத் தமிழ்க் காப்பிய மாநாட்டை நடத்திவருகின்றது. முதல் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இரண்டாம் மாநாட்டைத் தமிழ்க்கூடல் நகராகிய மதுரையில் நடத்தவுள்ளது. இந்நிறுவனத்தின் கல்வியியல்தொழில்நுட்பப் பிரிவு தமிழிணையம் வளர்க்கும் பணியைத் தலையாயப் பணியாகக் கொண்டுள்ளது. அப்பிரிவே உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துத் தமிழ்த் தொழில் நுட்பத்தை எளிய முறையில் தமிழர்கள் அனைவருக்கும் சென்று சேரும்வகையில் ”உலகத் தமிழிணைய மாநாடு – 2017″ கோலாலம்பூரில் ஆகத்து 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ளது.
நிறுவனத்தின் நோக்கம்:
தமிழின் தொல்லிலக்கியங்களான காப்பியங்களை உலக அரங்கில் பொதுமையாக்கப்படுவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை நோக்கமாகும். நாடகம், குறும்படம், இசைப்பாக்கள், கதை என்று கலையும் கணினிமையும் சங்கமிக்கும் காலத்திற்கேற்ற மின்னிலக்க வடிவில் காப்பிய இலக்கியங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. மக்கள் போற்றும் இலக்கியங்களாகக் காப்பியங்களை எளிமைப்படுத்தும் முயற்சியையும் மேற்கொண்டுவருகின்றது.
“தமிழ்க் காப்பியங்களில் வேரூன்றியுள்ள தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், வரலாறு, கலை முதலியவற்றை இயல், இசை, நாடகம், மின்னிலக்கம் வடிவில் உலகத் தமிழர்கள் அனைவரும் அறியச் செய்தல்” என்பதை இலக்காகக் கொண்ட நிறுவனம், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான நிறுவனம் அன்று.
உலகத் தமிழர்கள் அனைவருக்குமான காப்பியத் தமிழ் நிறுவனமாகும். கடையேனுக்கும் கடைக்கோடியில் வாழும் தமிழனுக்குமான எளிய தமிழ் நிறுவனம் ஆகும்.