இந்த சொற்றொடரை அடிக்கடி நமது செல்லியல் செய்திகளில் படித்திருப்பீர்கள்.
உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்ற அமைப்பின் சுருக்கமான பெயர்தான் உத்தமம். ஆங்கிலத்தில் “INFITT” – International Forum for Information Technology in Tamil.
‘உத்தமம்’ அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘தமிழ் இணைய மாநாடு’ இவ்வாண்டு கனடாவின் தொரண்டோ நகரில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக ஏற்கனவே உத்தமம் அறிவித்திருந்தது. அதனை செல்லியலிலும் ஒரு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையில், தொழில்நுட்பத்திற்கே தொடர்பில்லாத, தகவல் தொழில் நுட்ப உலகில் நாம் கேள்விப்படாத ஒரு மலேசிய அமைப்பு அதே நாட்களில் மலேசியாவில் ‘தமிழ் இணைய மாநாடு 2017’ நடைபெறும் என்றும், அந்த மாநாட்டிற்கு அனைத்துலக அமைப்புக் குழுவையும் ஆலோசகர் குழுவையும் அறிவித்திருந்தது.
இந்த இரண்டாம் அறிவிப்பு, தொழில்நுட்ப ஆர்வலர்களிடையே, குறிப்பாக ஆண்டுதோறும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுவரும் கணினித் துறை வல்லுநர்களிடையே சில கேள்விகளையும், குழப்பங்களையும் எழுப்பியுள்ளதால் – அது குறித்த முரண்பட்ட தகவல்கள் நமக்கும் கிடைத்ததால் – செல்லியல் சார்பாக உத்தமம் மற்றும் அந்த அமைப்பு நடத்தும் மாநாடு ஆகியவை குறித்த பின்புலத்தை அறிய முற்பட்டோம்.
உத்தமம் 2000ஆம் ஆண்டில் தொடங்கியது
இன்பிட் – அதாவது – உத்தமம் 2000ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டதாகும்.
இதன் தோற்றுநர் தலைவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான டாக்டர் ஆனந்தகிருஷ்ணன். இவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமாவார்.
உத்தமம் தோற்றுவிக்கப்பட்டபோது, உருவான முதல் நிர்வாகக் குழுவில் உதவித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமது மலேசிய நாட்டின் கணினி நிபுணர்களில் ஒருவரான – தமிழ்த் தகவல் நுட்பத் துறையில் அனைத்துலக அளவில் நன்கு அறிமுகமான முத்து நெடுமாறன் ஆவார்.
பின்னர் 2004-ஆம் ஆண்டில் உத்தமம் அமைப்பின் அனைத்துலகத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்து நெடுமாறன்.
சிங்கப்பூரின் அருண் மகிழ்நன் உத்தமம் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இந்த அமைப்பை அனைத்துலக அரங்குகளில் பிரபலமாக்குவதற்கும், அனைத்துலக தரத்திற்குக் கொண்டு செல்வதிலும் பெரும்பாடு பட்டார்.
உத்தமம் அமைப்பின் முதல் தகவல் தொழில் நுட்ப மாநாடு 2001-ஆம் ஆண்டில் மலேசியாவில் நடத்தப்பட்டது என்பதுதான் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம். அப்போது நடத்தப்பட்ட கண்காட்சி ஏறத்தாழ 11 ஆயிரம் வருகையாளர்களை ஈர்த்தது என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
தொடர்ந்து பல நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த மாநாடு மீண்டும் 2013-இல் மலேசியாவில் நடத்தப்பட்டது. தற்போது உத்தமம் அமைப்பின் மலேசியப் பிரிவுக்குத் தலைவராக இருக்கும் சி.ம.இளந்தமிழ் அப்போது உத்தமம் அமைப்பின் அனைத்துலகத் தலைவராகவும் இருந்தபோது இந்த மாநாடு மலேசியாவில் நடத்தப்பட்டது.
மாநாடு ஏன்? நோக்கங்கள் என்ன?
ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படும் உத்தமம் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மாநாடுகளில், உலகெங்கிலும் இருந்து தமிழ் தொழில் நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், ஆராய்ச்சிகள் செய்பவர்கள் போன்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படுகின்றன.
இதன் மூலம் சிறந்த அனைத்துலக அறிவாற்றலை ஒரு முனையில் கொண்டு வந்து சேர்த்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்காக ஆவணப்படுத்தும் மாபெரும் பணியை உத்தமம் தனது மாநாடுகளின் மூலம் மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, படைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்துலகத் தரத்தில் அமைய வேண்டும் – பயன்மிக்கவையாக இருக்க வேண்டும் – புதிய தொழில் நுட்பத் துறைகளை நுணுகி ஆராய வேண்டும் – என்ற என்ற நோக்கங்களோடும், அந்தக் குறிப்பிட்ட ஆண்டின் கருப்பொருளோடு இணைந்த – ஏற்ற – அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளோடும் கட்டுரைகள் அனைத்துலகத் தரம் வாய்ந்த தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
தமிழ் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்பவர்கள் என்ற முறையிலும் – தமிழ் மொழியைக் கற்பிப்பதில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துபவர்கள் என்பதாலும் – ஆசிரியர் சமூகத்திற்குப் பெரும்பங்கு இருக்கிறது என்ற காரணத்தால் இந்த மாநாடுகளில் ஆசிரியர்களின் பங்கேற்புக்கும், அவர்களின் ஆய்வுக் கட்டுரைகளுக்கும், சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
இருந்தாலும், மாநாடு நடைபெறும் கால அளவு – ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் சொல்லப்பட்டு விட்ட விஷயங்களை மீண்டும் படைக்காமல் தவிர்த்தல் – நடப்பில் முன்னணியில் இருக்கும் தொழில் நுட்பத் தகவல்களுக்கு முன்னுரிமை – மறைந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணம் – பெரும்பாலான தொழில்நுட்ப நிபுணர்கள் ஏற்றுக் கொள்ளாத, அல்லது ஒப்புக் கொள்ளாத அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளைத் தவிர்ப்பது – போன்ற ஒருமித்த கருத்துருவாக்கத்தால் பல கட்டுரைகள் இந்த மாநாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
கனடாவில் முதன் முறையாக நடைபெறும் மாநாடு
2017-ஆம் ஆண்டுக்கான உத்தமம் மாநாடு முதன் முறையாக கனடாவில் நடைபெறும் என ஓராண்டுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் சி.ஆர்.செல்வகுமார் செயல்படுகிறார். இவர் மின்னணு (எலெக்ட்ரோனிக்ஸ்) பொறியியல் துறையில் பேராசிரியரும், ஆய்வாளருமாவார். தமிழ்த் தொழில் நுட்பங்களில் இவரது பங்களிப்புகள் அனைத்துலக அளவில் அறியப்பட்டவையாகவும், பாராட்டு பெற்றவையாகவும் இருக்கின்றன.
மலேசியாவிலும் ஏன் இன்னொரு மாநாடு?
இத்தகைய பெருமை வாய்ந்த, சிறந்த கல்விமான்களைக் கொண்டும், அறிஞர்களைக் கொண்டும் அனைத்துலக அளவில் ஒரு மாநாடு நடத்தப்படும்போது –
அந்த மாநாட்டை நடத்தும் அமைப்புக் குழுவுக்கு மலேசியாவில் ஏற்கனவே பிரதிநிதித்துவம் இருக்கும்போது –
அந்த மலேசியப் பிரதிநிதித்துவ அமைப்பே மலேசியக்குழு ஒன்றுக்கு தலைமை ஏற்று கனடா மாநாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வரும் வேளையில்,
அதே நாட்களில் இன்னொரு அமைப்பு மலேசியாவில் அதே போன்றதொரு மாநாட்டை நடத்தி மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது நியாயமா?
தமிழுக்குப் பயன்தரும் என்றால் அதற்காக ஒரு மாநாட்டையோ, நிகழ்ச்சியையோ யாராக இருந்தாலும் நடத்துவதில் தவறில்லை.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு மாநாட்டின் பெயரிலேயே புதிதாக ஒரு குழுவை அமைத்துக் கொண்டு மாநாடு நடத்துவது மலேசியத் தமிழர்களுக்கு பெருமையா? நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில்லையா இது?
தமிழ் தகவல் தொழில்நுட்பம் என்று வரும்போது உலக அரங்கில் மலேசியாவுக்கு தனிப் பெருமை இருக்கிறது. அதற்குக் கறை பூசுவது போல் நாமே நடந்து கொள்வது முறையா?
சரி! ஒரு குழு நடத்துகிறார்கள் என்றால், அவர்களின் பின்புலம் என்ன? அவர்களின் அனுபவங்கள் என்ன? இதன் நோக்கங்கள் என்ன? என்பதையெல்லாம் தெளிவாக யாராவது விளக்க முடியுமா?
கேள்விகளை முன் வைத்து விட்டோம்!
உரியவர்கள் யாராக இருந்தாலும் விளக்கங்கள் தந்தால் அதனைப் பதிவேற்றம் செய்ய செல்லியல் தயாராக இருக்கிறது!