Home Featured நாடு கணபதி ராவுக்குப் பதிலாக மீண்டும் சேவியர் ஜெயகுமார்!

கணபதி ராவுக்குப் பதிலாக மீண்டும் சேவியர் ஜெயகுமார்!

1347
0
SHARE
Ad

xavier0723ஷா ஆலாம் – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி மீண்டும் கைப்பற்றினால், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியாகத் தற்போது பதவி வகிக்கும் ஜசெக பிரதிநிதி கணபதி ராவுக்குப் பதிலாக மீண்டும் பிகேஆர் கட்சி சார்பில் சேவியர் ஜெயகுமார் (படம்) மீண்டும் இடம் பெறுவார் என பிகேஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சேவியர் முதன் முறையாக 2008 பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியைக் கைப்பற்றினார். அதன் பின்னர் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவிலும் இந்தியர் பிரதிநிதியாக பிகேஆர் கட்சியின் சார்பில் இடம் பெற்றார்.

இருப்பினும் 2013 பொதுத் தேர்தலில் சேவியர் மீண்டும் தனது ஸ்ரீ அண்டலாஸ் தொகுதியில் வென்றாலும், இந்த முறை ஜசெக, சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதித்துவத்தைத் தாங்கள் வைத்திருக்க வேண்டும் என உரிமை கோரியது.

#TamilSchoolmychoice

Ganapathi-Rao-Featureஅன்றைய பக்காத்தான் கூட்டணி அந்தக் கோரிக்கையை ஏற்று, ஜசெகவுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியை நியமிக்க வாய்ப்பளிக்க, அதன்படி கோத்தா ஆலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் கணபதி ராவ் (படம்) ஆட்சிக் குழு உறுப்பினரானார்.

ஆனால் இந்த முறை மீண்டும் பிகேஆர் கட்சிக்கே சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் இந்தியர் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என பிகேஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சேவியர் ஜெயகுமார் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் நிறுத்தப்படுவார் என்ற ஆரூடங்களும் பிகேஆர் கட்சி வட்டாரங்களில் நிலவுகின்றன. இருப்பினும், இன்றைய நிலையில் மீண்டும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிட்டு அந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவே சேவியர் விரும்புகிறார் என்றும் அதன் மூலம் மீண்டும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற நம்பிக்கைக் கொண்டிருக்கிறார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.