Home Slider திரைவிமர்சனம்: “மாம்” – பதற வைக்கும் கதை, ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பு!

திரைவிமர்சனம்: “மாம்” – பதற வைக்கும் கதை, ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பு!

2010
0
SHARE
Ad

MOM3கோலாலம்பூர் – டீச்சர் தேவிகாவின் (ஸ்ரீதேவி) மகளை, 4 பேர் ஓடும் காரில் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டு, அவளை அடித்துத் துன்புறுத்தி குப்பை போல் வீதியில் வீசிவிட்டுச் செல்ல, நொறுங்கிப் போகும் தாயின் மனம், அந்த 4 பேருக்கும் நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கிறதா என காத்திருக்கிறது.

ஆனால் சட்டம் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி விடுதலை செய்துவிட, ஒரு தாயாக அவர்கள் 4 பேருக்கும் ஸ்ரீதேவி எப்படி தண்டனை கொடுக்கிறார்? என்பதே ரவி உத்யவார் இயக்கியிருக்கும் ‘மாம்’ திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

ரசிக்க

#TamilSchoolmychoice

படத்தின் மிகப் பெரிய பலமே நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கும் தினசரி கேட்கும், நாளிதழில் படிக்கும் கதையைப் படமாக்கியிருப்பது தான்.

இப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை என்று எந்த ஒரு நாடும் சொல்லிவிட முடியாது அந்த அளவிற்கு எதார்த்தங்கள் நிறைந்த ஒரு கதை அதை அப்படியே நேர்கோட்டில் குழப்பமில்லாமல் நகரும் திரைக்கதை.

இரண்டாவது அந்தக் கதையில் வரும் ஒரு தாயின் கதறல், வேதனை, கோபம், பழிவாங்கும் உணர்வு, ஆனந்தம் என அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஸ்ரீதேவியின் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனை கன கச்சிதமாக ஸ்ரீதேவி கையாண்டு தனது மிகச் சிறந்த நடிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதிலும் அந்தக் கடைசிக் காட்சியில், “ஹவ் டேர் யு டச் மை டாட்டர்” என்று ஸ்ரீதேவி அலறும் அந்தக் காட்சி திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் கூட காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

MOM1ஸ்ரீதேவியின் மகளாக சஜல் அலி மிகத் தத்ரூபமாக நடித்திருக்கிறார். தனது பாதிப்புகளை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் கண்கலங்க வைக்கிறது.
அதேபோல், தனியார் துப்பறிவாளராக நவாசுதீன் சித்திக் மிகச் சிறந்த நடிப்பு. காட்சிக்குக் காட்சி சுவாரசியமாக நடித்திருப்பதோடு, போகிற போக்கில் அவர் சொல்லும் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது.

உதாரணமாக, நவ்சுதீன் : “எனக்கு எங்க அம்மாவைப் போலவே பெரிய பாடகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது”

ஸ்ரீதேவி: “உங்க அம்மா பாடகரா?”

நவ்சுதீன்: இல்லை.. அவருக்கு பெரிய பாடகராக வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது.

அட்னான் சித்திக்.. மனைவி, பிள்ளைகளின் ஆசைகளை மட்டுமே நிறைவேற்றும், தனது ஓய்வு நேரங்களில் அவர்களின் சந்தோஷங்களை மட்டுமே கேட்டு அறிந்து கொள்ளும் ஒரு தந்தையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் நடிகர் ரகுமானை நினைவுபடுத்துகிறார். தமிழ் டப்பிங்கில் அவருக்கு ரகுமான் குரல் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

போலீஸ் அதிகாரியாக அக்‌ஷய் கண்ணா மிரட்டலான நடிப்பு. அவர் வரும் காட்சி அனைத்திலும் திரைக்கதை வேகம் பிடித்து சுறுசுறுப்படைகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், அனே கோசுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பக்கபலமாக இருக்கின்றது.

யாருக்கான படம்?

நாம் நாளிதழ்களில் படிக்கும் ஒரு கதையாக இருந்தாலும் கூட, அதை காட்சிப்படுத்தியிருக்கும் விதமும், ஸ்ரீதேவியின் உணர்வு வெளிப்பாடுகளும் நம்மை எங்கும் நகரவிடாமல் இருக்கையிலேயே கட்டிப் போட்டுவிடுகிறது.

பருவ வயது பிள்ளைகள், பெற்றோர் என பலத்தரப்பு மக்களும் பார்த்து விழிப்புணர்வை அடையக்கூடிய அனைத்து அம்சங்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றது. நிச்சயமாக திரையரங்கு அனுபவத்தைக் கொடுக்கும்.

மொத்தத்தில் ‘மாம்’ – பதற வைக்கும் கதை, ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பு.. தவற விடக் கூடாத திரைப்படம்!

-ஃபீனிக்ஸ்தாசன்