கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது எதிர்ப்புக் கணைகளை வீசும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தனது வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் நஜிப்பின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி எச்சரித்துள்ளார்.
மகாதீர் அரசியல் நடத்தினாலும், அதில் அவர் பண்புகளையும், நடைமுறைகளையும், அரசியல் நன்னடத்தையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஹமிடி கேட்டுக் கொண்டார். ஒரு சராசரி மனிதர் என்ற முறையில் மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியின்போது அவரது பலவீனங்களும், தவறுகளும் பலமுறை வெளிப்பட்டன என்றாலும் மரியாதை கருதி அவை அனைத்தும் மூடி மறைக்கப்பட்டன என்றும் ஹமிடி மேலும் தெரிவித்தார்.
சாஹிட் ஹமிடி தலைவராக இருக்கும் பாகான் டத்தோ அம்னோ தொகுதி பேராளர் மாநாட்டை இன்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றியபோதே ஹமிடி மேற்கண்டவாறு கூறினார். “நமது பதவிக் காலம் முடிந்துவிட்டதும் வரலாறு நம்மை தீர்மானிக்கட்டும். மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டாம். தனியார் மயமாக்கப்பட்ட விவகாரங்கள் தோல்விகளில் முடிந்ததை மறந்து விட வேண்டாம். பழைய புண்களை நாங்கள் கிளற விரும்பவில்லை. மகாதீர் என்ன செய்தார் என்பதும் அவரது பல பலவீனங்களும் எங்களுக்கும் தெரியும்” என்றும் ஹமிடி கூறினார்.
அம்னோ மீதும், அரசாங்கத்தின் மீதும் தனது கண்டனங்களால் மகாதீர் எல்லை மீறிவிட்டதாகவும், இதனால் நஜிப்பும் பொறுமை இழந்து விட்டார் என்றும் ஹமிடி தெரிவித்திருக்கிறார்.
மகாதீர் வலிமையானவர் என்பதால் மட்டும் அவரால் சாதிக்க முடிந்தது என்று கூற முடியாது, மாறாக, வலிமையான ஆதரவை அம்னோ வழங்கிய காரணத்தால்தான் அவரால் சாதிக்க முடிந்தது என்றும் கூறியிருக்கும் சாஹிட் அன்று இதே அன்வார் இப்ராகிம் மீது பலவற்றையும் கூறி அவரை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டிய மகாதீர் இன்று நம்முடன் கொண்ட கருத்து வேறுபாடுகளால் அதே அன்வாருக்கு ஆதரவு தெரிவித்து தனது செயல்பாடுகளில் பல்டி அடித்திருக்கிறார் என்றும் மகாதீரை சாஹிட் சாடியிருக்கிறார்.