Home நாடு டாக்டர் சுப்ரா மீண்டும் சிகாமாட் தொகுதியிலேயே போட்டி!

டாக்டர் சுப்ரா மீண்டும் சிகாமாட் தொகுதியிலேயே போட்டி!

1001
0
SHARE
Ad
subra-seg-batu anam-umno-22062017 (5)
சிகாமாட் பத்து அன்னம் வட்டாரத்தில் கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்னோ மகளிர் பிரிவினர் டாக்டர் சுப்ராவுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்ட காட்சி

கோலாலம்பூர் – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தொகுதி மாறி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில்தான் அவர் மீண்டும் உறுதியாகப் போட்டியிடுவார் என்றும் அவை மேலும் தெரிவித்தன.

கடந்த 2004-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முதன் முறையாக சிகாமாட் தொகுதியில் போட்டியிட்டு வென்ற டாக்டர் சுப்ரா அதன் பின்னர் 2008, 2013 பொதுத் தேர்தல்களிலும் அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டார்.

segamat-thendayuthabani-special poojai-30062017 (4)
கடந்த 30 ஜூன் 2017-ஆம் நாள் சிகாமாட் தண்டாயுதபாணி ஆலயத் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் டாக்டர் சுப்ரா கலந்து கொண்டபோது….
#TamilSchoolmychoice

மூன்று தவணகளாக சிகாமாட் தொகுதியைத் தற்காத்து வந்துள்ள அனுபவம், அதனால் கிடைத்த ஆதரவு – இவற்றைக் கொண்டு மீண்டும் சிகாமாட் தொகுதியில் வெல்ல முடியும் என டாக்டர் சுப்ரா கருதுகிறார் என அவருக்கு நெருக்கமான மஇகா வட்டாரம் ஒன்று உறுதிப்படுத்தியது.

“பாதுகாப்பான தொகுதி என்று பார்த்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தத் தொகுதியுமே பாதுகாப்பானது என்று கூறுவதற்கில்லை. அந்த அளவுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழும் என்பதால், பாதுகாப்பு கருதி தொகுதி மாறும் எண்ணத்தை டாக்டர் சுப்ரா கொண்டிருக்கவில்லை. அப்படிப் பார்த்தால் இன்றைய நிலையில, கேமரன் மலையை விட மூன்று தவணைகளாக அவர் வென்று வந்துள்ள சிகாமாட் தொகுதியே அவருக்குப் பாதுகாப்பானதாக இருக்க முடியும்” என்றும் அந்த மஇகா வட்டாரம் மேலும் தெரிவித்தது.

hari raya-open hse-palong timur-07072017 (6)
நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி சிகாமாட் பெல்டா பாலோங் தீமோரில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்கான ஹரிராயா விருந்துபசரிப்பு சிகாமாட் அம்னோவுடன் இணைந்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் டாக்டர் சுப்ரா…

சிகாமாட் தொகுதிக்குத் தொடர்ந்து வாரந்தோறும் வருகை தந்து பொதுமக்களையும், வாக்காளர்களையும் சந்திப்பதை டாக்டர் சுப்ரா வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அண்மையில் ஹரிராயா நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு பல்வேறு நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, விருந்துபசரிப்புகளையும் அந்தத் தொகுதியில் டாக்டர் சுப்ரா நடத்தினார்.

குறிப்பாக, ஹரி ராயாவுக்கு அடுத்த இரண்டு நாட்களில் சிகாமாட் தொகுதியில் உள்ள அம்னோ மற்றும் முஸ்லீம் சமூகத் தலைவர்களின் இல்லங்களுக்கு தனது துணைவியாருடன் வருகை மேற்கொண்ட டாக்டர் சுப்ரா நாள் ஒன்றுக்கு தலா 25 இல்லங்களுக்கு வருகை தந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

seg-taman-ksm-16062017-2
சிகாமாட்டில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி சீன சமூகத்தினரோடு நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் சுப்ரா கலந்து கொண்டபோது…

தொடர்ந்து இந்தியர்கள் மற்றும் சீனர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

இவ்வாறு, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனது தொகுதிப் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் டாக்டர் சுப்ரா கேமரன் மலைக்கு அடுத்த பொதுத் தேர்தலில் தொகுதி மாறுவார் என்பது விஷமப் பிரச்சாரம் என்றும் மக்களைக் குழப்பி விடும் செய்தி என்றும் மஇகா வட்டாரத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

கேமரன் மலை மஇகாவின் தொகுதி என்றும் அங்கு மீண்டும் மஇகா போட்டியிடுவது உறுதி என்றும் ஏற்கனவே டாக்டர் சுப்ரா அறிவித்திருக்கிறார்.