புதுடில்லி – அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள, முதன் முறையாக மலேசியா உள்ளிட்ட 10 ஆசியான் நாட்டுத் தலைவர்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுக்கவிருக்கின்றார்.
தற்போது மோடி ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடைபெறும் ஜி-20 அனைத்துல மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எல்லைத் தகராறுகள் மீண்டும் முளைத்துள்ள நிலையில், சீனாவுக்கு எதிராக அயல் நாடுகளுடனான தூதரக நல்லுறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மோடி இந்த புதுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் மற்ற நாடுகளின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு குடியரசு தினக் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்படுவது வழக்கம் என்றாலும், 10 ஆசியான் தலைவர்களையும ஒரே ஆண்டில் வரவழைப்பது மோடியின் புதிய வெளியுறவுக் கொள்கை வியூகமாகப் பார்க்கப்படுகிறது.