கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 – உலகத் தமிழ் தகவல், தொழில் நுட்ப மன்றம் (‘உத்தமம்’) என்ற பெயரில் இயங்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய 12ஆம் மாநாடு, நேற்று மாலை, தலைநகர், மலாயாப் பல்கலைக் கழகத்தில் சுமார் 1,000 பேர் கலந்து கொள்ள கோலாகலமாகத் தொடங்கியது.
இந்த ஆண்டுக்கான மாநாட்டின் மையக் கருப்பொருள் ‘கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை’ என்பதாகும். மாநாட்டு தொடக்க உரைகளின் இடையிடையே நமது பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் காட்டும் பரத நாட்டிய நடனங்களும் இடம் பெற்றன.
இந்த மாநாட்டை மலேசிய தொடர்புத் துறை மற்றும் பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாபரி சிக் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றினார். தமிழ் மொழி சார்ந்த இத்தகைய உலகளாவிய முயற்சிகளுக்கு அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும் எனத் தனதுரையில் கூறிய அமைச்சர் மாநாட்டின் செலவினங்களுக்காக 50,000 ரிங்கிட் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
ரோபோ இயந்திர மனிதனின் ஒளிக் காட்சியோடு தொடக்கம்
‘ரோபோ’ போன்ற வடிவமைப்பில் உயரமான இயந்திர மனிதன் மாநாட்டு மண்டபத்தில், அமர்ந்திருந்த மக்களோடு நடமாடி, பின்னர் மேடையேறி, வண்ணமயமான ஒளிக் காட்சிகளுடன் மாநாட்டு முத்திரையை அரங்கேற்றினார். வந்திருந்தவர்களைப் பெரிதும் கவர்ந்த இந்த தொடக்கக் காட்சி அனைவரின் கைத்தட்டலையும் பெற்றது.
பின்னர், மலாயாப் பல்கலைக் கழகத்தின் மொழி மற்றும் மொழியியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் சுரைடா முகமட் டோன் வரவேற்புரையாற்றினார். தமதுரையில் வந்திருந்தவர்களை வரவேற்று, இத்தகைய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த உத்தமம் செயற்குழுவினருக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இத்தகைய மாநாடுகளுக்கு மலாயாப் பல்கலைக் கழகம் எப்போதும் ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்தார்.
மாநாட்டுத் தலைவரும், உத்தமம் அமைப்பின் நடப்புத் தலைவருமான சி.எம்.இளந்தமிழ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் உத்தமம் மலேசியக் கிளையின் சார்பாக கணினி மற்றும் இணையம் வழியாக மலேசியாவில் தமிழ்ப் பயன்பாட்டை பரப்புவதில் தாங்கள் பெரிதும் வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கான ஆர்வலர்களிடையேயும், மாணவர்களிடையேயும் தமிழ்க் கணினி பயன்பாட்டை தாங்கள் பரப்பியுள்ளதாகவும் இளந்தமிழ் தெரிவித்தார்.
பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் உரை
கான்பூரிலுள்ள இந்திய தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணனும் இந்த தொடக்க மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
கடந்த காலங்களில் இணையத் தமிழையும், கணினித் தமிழையும் மேம்படுத்துவதில் பங்காற்றியவர்களை நினைவு கூர்ந்த அவர், எதிர்வரும் காலங்களில் இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்புரையாற்றிய மலாயாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டான்ஸ்ரீ கவுத் ஜாஸ்மோன் கணினியிலும், இணையத்திலும் தமிழ் மொழியைக் கொண்டுவர எதிர்நோக்கப்படும் அதே போன்ற சவால்களை மலாய் மொழியும் எதிர்நோக்குகின்றது எனத் தெரிவித்தார்.
தமிழ் மொழி குறித்த மேலும் அதிகமான கருத்தாய்வுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், வாய்ப்பளிக்கவும், ஒத்துழைப்பு நல்கவும், நிதி உதவி அளிக்கவும் மலாயாப் பல்கலைக்கழக நிர்வாகம் எப்போதும் தயாராக இருக்கின்றது என்றும் துணைவேந்தர் தனதுரையில் தெரிவித்தார்.
அமைச்சர் ஷாபரி சிக்கின் திறப்புரை
மாநாட்டை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சர் ஷாபரி சிக் இணைய வளர்ச்சிக்கும், பல் ஊடக தொலைத் தொடர்பு வளர்ச்சிக்கும் மலேசிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
உலகம் எங்கிலும் உள்ள உயர்நிலை பல்கலைக் கழகங்களோடு இணைந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வரும் உத்தமம் அமைப்பைப் பாராட்டிய அமைச்சர், இந்த முறை மாநாட்டை கோலாலம்பூரில் நடத்துவதற்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, மாநாட்டு செலவினங்களுக்கான 50 ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
முத்து நெடுமாறன் மையக் கருத்துரை
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் நிறைவுற்றதும், உத்தமம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், முரசு மென்பொருள், மற்றும் செல்லினம், செல்லியல் ஆகிய செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், மாநாட்டின் கருப்பொருள் மீதான மையக் கருத்துரையை வழங்கினார்.
கணினி, இணையம் மற்றும் கைத்தொலைபேசி போன்ற கையடக்கக் கருவிகளின் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்கு சிறப்பான முறையில் ஊடுருவி உள்ளது என்பது குறித்து அவர் திரைக்காட்சிகளுடன் விரிவாக எடுத்துரைத்தார்.
இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறும் மாநாட்டில் இன்று முதல் பல்வேறு தொழில் நுட்ப அறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைக்கப்படவிருக்கின்றன.
பொதுமக்கள் கலந்து கொள்ளும், பல்வேறு அமைப்புக்களின் அரங்குகளோடு கூடிய கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ளது.