கோலாலம்பூர் – 16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டை முதல் முறையாக கனடாவின் தொராண்டோ நகரில் வரும் ஆகஸ்டு மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் செல்வக்குமார் மற்றும் கூகுள் நிறுவனத்தின் கனடா கிளையில் பணியாற்றுபவரான செந்தூரன் ஆகியோரின் உள்ளூர் குழு தலைமையேற்று நடத்தவுள்ளதாக பன்னாட்டு குழு தலைவரும், மலேசிய உத்தமத்தின் தலைவருமான சி.ம.இளந்தமிழ் இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உத்தமம் என்னும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமானது அரசு சார்பற்ற பன்னாட்டு நிறுவனம் ஆகும். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப ஆளுமைகள், தமிழ்க் கணிஞர்கள், நிரலாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கணினி ஆர்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்கள் சந்திக்கும் தளத்தினை நேரடியாகவும் மின்னியல் வழியும் நடைமுறைப் படுத்துவதை தனது நோக்கமாக உத்தமம் கொண்டுள்ளது.
16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் கருப்பொருளாக “ஆழ்த்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)” மற்றும், “தமிழில் தரவு அறிவியல் (Data Science)” ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
உலகில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் நாடுகளான இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 15 ஆண்டுகளாக இம்மன்றத்தின் சார்பில் ஆய்வரங்கம், கருத்தரங்கம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாடுகள்
மலேசியாவில் நான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-லும் பன்னிரெண்டாவது மாநாடு 2013-லும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நான்காவது மாநாட்டினை திரு முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் முன்னின்று நடத்த அன்றைய பிரதமர் துன் மகாதீர் முகமது அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார். பன்னிரெண்டாவது மாநாடு சி.ம.இளந்தமிழின் (படம்) தலைமையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. அன்றைய தகவல் தொழில்நுட்ப பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சப்ரி சிக் மாநாட்டினைத் தொடக்கி வைத்தார்
இதுகுறித்து சென்னையில் அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநர் இனிய நேரு அவர்கள், “இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழும் வரலாற்று சிறப்புமிக்க தொராண்டோ நகரில் முதல் முறையாக நடைபெறவிருக்கும் தமிழ் இணைய மாநாட்டின் ஆய்வரங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகமாக வெளியிடவுள்ளது. மேலும் தமிழ் மொழியில் பயன்பாட்டில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கவும் மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொராண்டோ பல்கலைக்கழகத்தின் சுகார்பரோ வளாகத்தில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனத்தினுடைய (IEEE) கனடா கிளையின் ஆதரவோடும் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டு ஆய்வரங்கம்
இம்மாநாட்டின் முக்கிய பகுதியான ஆய்வரங்கத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை மாநாட்டுக் குழு முடிவு செய்துள்ள 12 தலைப்புகளில் இருந்து ஒன்றைத் தெரிவு செய்து அதற்கான ஆய்வுச் சுருக்கத்தை cpc2017@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தகவலுக்கு http://www.tamilinternetconference.org மற்றும் http://www.infitt.ca என்னும் இணையதள முகவரிகளையும் cpc2017@infitt.org என்னும் மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் உள்ளூர் குழுத் தலைவரும் கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியருமான செல்வக்குமார் அவர்களிடம் இம்மாநாடு குறித்து தொடர்புக்கொண்டு கேட்டபோது, “மொழியைக் கருவியாகக் கொண்டு இயங்கும் மாந்தனுக்குப் போட்டியாக கணினி வளர்ந்து பல துறைகளில் வியப்பூட்டும் வளர்ச்சியை அடைந்துள்ளது. இதில் தமிழ்மொழிசார் அனைத்து கணினிநுட்பங்களையும் வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, உலகமெங்கும் தமிழ்க் கணினி மற்றும் இணைய வளர்ச்சிக்காக உழைக்கும், உழைக்க நினைக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களை இணைக்கும் பாலமாக இந்த மாநாடு அமையுமென்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இதுவரை இம்மாநாட்டின் சிறப்பு சொற்பொழிவாளர்களாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கையறிவுத்திறன் மற்றும் ஆழக்கற்றறிதல் துறையின் தலைமை விஞ்ஞானியான லி டெங் மற்றும் இயந்திர நுண்ணறிவு வல்லுநரான ஆண்ட்ரு கே.சி. வோங் ஆகியோர் தங்களின் வருகையை உறுதிசெய்துள்ளார்கள். மேலும், சில தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை அழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
மாநாட்டின் மற்றொரு பகுதியாக 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பயிற்சிகள்/உதவிகள் வழங்கும் மக்கள் அரங்கமும், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி அரங்கமும் அமைக்கப்படவுள்ளது. இதைப் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
மாநாட்டிற்கு தகுதியுள்ளதாக தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள், குறிப்பாக மொத்தம் நான்கு மாணவர்கள்/இளைஞர்களுக்கு பயணப்படியாக 500 கனேடிய டாலர்களும், பெண்களுக்கென சிறப்பு பரிசுகளும் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.