சென்னை – தர்மம் அதர்மத்தை அழிப்பதாகக் கூறுகிறோம். ஆனால் தர்மத்திற்குள்ளும் ஒரு அதர்மம் இருக்கிறது. அதர்மத்திற்குள்ளும் ஒரு தர்மம் இதுக்கிறது.
என்ன புரியவில்லையா? நேர்மையும் துணிச்சலும் கொண்ட போலீஸ் அதிகாரியான மாதவன், 18 பேரை எண்கவுண்டர் செய்தவர். அந்த 18 பேரில் தாதா விஜய் சேதுபதியின் தம்பி கதிரும் ஒருவன்.
விக்ரமாதித்யனின் தலையில் வேதாளம் ஏறி உட்கார்ந்து கொண்டு கதைகள் சொல்வது போல், மாதவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதெல்லாம் விஜய் சேதுபதி பல கதைகள் சொல்கிறார்.
அக்கதைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் மாதவன், இறுதியில் தான் விஜய் சேதுபதியின் நோக்கம் என்ன? கதிரின் மரணத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிகிறார்.
அதனை மிக சுவாரசியமான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர் புஷ்கர் – காயத்ரி.
படத்தில் போலீஸ் எண்கவுண்டர் நடவடிக்கைகள், அதற்கேற்ப வரும் வசனங்கள் அருமை. அதனை மாதவன், பிரேம் கூட்டணி தனித்துவமான நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கும் பாணி சிறப்பு.
அதேபோல் குண்டர் கும்பல் செயல்பாடுகளில் விஜய் சேதுபதி மீண்டும் மிரட்டியிருக்கிறார். சியாம் சிஎஸ் பின்னணி இசையும், பிஎஸ் வினோத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு வீரியம் கூட்டியிருக்கின்றன.
முதல் பாதி முழுக்க குருதிப்புனல் படத்தைப் போன்ற உணர்வைத் தரும் விக்ரம் வேதா, இரண்டாம் பாதியில் திடீர் திருப்பங்களால் சுவாரசியம் கூட்டுகிறது.
போலீஸ் திருடன் கதை விரும்பிகளுக்கு இந்தப் படம் நிச்சயமாக மகிழ்ச்சி தரும்.
மொத்தத்தில் விக்ரம் வேதா – வேதாளம் சொல்லும் துரோகக் கதைகள்.. நன்றாகவே இருக்கிறது.
– ஃபீனிக்ஸ்தாசன்