Home Featured நாடு லாபிஸ் தொகுதி : இரண்டாவது முயற்சியில் இராமகிருஷ்ணன் வெற்றி பெறுவாரா?

லாபிஸ் தொகுதி : இரண்டாவது முயற்சியில் இராமகிருஷ்ணன் வெற்றி பெறுவாரா?

1615
0
SHARE
Ad

ramakrishnan-dap-ex-senatorலாபிஸ் : எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முன்னணி பிரச்சார மாநிலமாக திகழப் போவது ஜோகூர் மாநிலம்தான் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த மாநிலத்திலுள்ள லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் மீண்டும் முன்னாள் செனட்டர் ராமகிருஷ்ணன் (படம்) இங்கு போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

பொதுவாக ஜசெக இந்தியர் வேட்பாளர்களை நிறுத்தும்போது, மஇகா போட்டியிடும் தொகுதிகளில்தான் அவர்களை நிறுத்தும். ஆனால், கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜோகூர் லாபிஸ் தொகுதியில், இந்திய வாக்காளர்கள் அதிகம் இருக்கின்ற காரணத்தால், அங்கு ஜசெகவின் இந்தியத் தலைவர்களில் ஒருவரான இராமகிருஷ்ணனை ஜசெக நிறுத்தியது.

2013 லாபிஸ் தொகுதி முடிவுகள்…

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் லாபிஸ் தொகுதிக்கான மசீச வேட்பாளரான சுவா தி யோங் முன்னாள் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுவா சொய் லெக்கின் மகனாவார். மசீசவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான சுவா  அனைத்துலக வாணிப, தொழில் துறை அமைச்சின் துணையமைச்சராகவும் தற்போது பதவி வகிக்கிறார்.

மசீச/தேசிய முன்னணி சார்பில் மீண்டும் லாபிஸ் தொகுதியில் சுவா தி யோங் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2008 முதல் லாபிஸ் தொகுதியைத் தற்காத்து வரும் சுவா தி யோங்குக்கு எதிராக 2013 பொதுத் தேர்தலில் களமிறங்கிய இராமகிருஷ்ணன், கடுமையான போட்டிக்கிடையில் 353 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றியைப் பறிகொடுத்தார்.

labis-parliament-2013-results2013 பொதுத் தேர்தலில் லாபிஸ் தொகுதி வாக்கு விவரங்கள்

இந்த முறை மீண்டும் இராமகிருஷ்ணனையே ஜசெக களமிறக்கும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. லாபிஸ் தொகுதியின் ஜசெக தலைவரான இராமகிருஷ்ணன், ஜோகூர் மாநிலத்தின் ஜசெக துணைத் தலைவருமாவார்.

கடந்த சில வாரங்களாக லாபிஸ் தொகுதியில் வாக்காளர்களைச் சந்திக்கும் பணிகளில் இராமகிருஷ்ணன் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை 23-ஆம் தேதி லாபிஸ் தொகுதியிலுள்ள பெல்டா நிலக் குடியேற்ற வட்டாரத்தில் நடந்த பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோ முக்ரிஸ் மகாதீருடன், இராமகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

ramakrishnan-labis-felda- (2)ஜூலை 23-ஆம் தேதி லாபிஸ் தொகுதியிலுள்ள பெல்டா செம்ப்லாக் பாராட் வட்டாரத்தில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் முக்ரிஸ் மகாதீர் – அருகில் இராமகிருஷ்ணன்…

லாபிஸ் தொகுதியின் கீழ் 2 பெல்டா நிலத் திட்டங்கள் வருவதால், அந்த வட்டாரத்தின் வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளில் பக்காத்தான் ஈடுபட்டு வருகிறது.

மீண்டும் இராமகிருஷ்ணன் போட்டியிடுவாரா?

லாபிஸ் தொகுதியின் நிலவரங்களை அறிந்து கொள்ள இராமகிருஷ்ணனை செல்லியல் தொடர்பு கொண்டபோது, “லாபிஸ் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் ஜசெக தலைமைத்துவம் முடிவு செய்யும். இருப்பினும், லாபிஸ் தொகுதியின் தலைவர் என்ற முறையில் ஜசெகவுக்காகவும், பக்காத்தான் ஹரப்பானுக்காகவும் எங்களின் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளோம். ஜோகூர் மாநிலத்தில் வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் மனமாற்றங்கள், பெர்சாத்து கட்சியின் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதினுக்கு ஜோகூர் மாநிலத்தில் இருக்கும் செல்வாக்கு ஆகிய காரணங்களால் இந்த முறை லாபிஸ் தொகுதியை வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

ramakrishnan-labis-felda- (1)லாபிஸ் தொகுதியில் உள்ள பெல்டா நிலத்திட்ட குடியேற்றக்காரர்கள் மத்தியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் – ஜசெக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் இராமகிருஷ்ணன்…

லாபிஸ் தொகுதியின் மற்றொரு விசேஷம் என்னவென்றால், இந்தத் தொகுதி, டான்ஸ்ரீ மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாகோ தொகுதியை அடுத்துள்ள தொகுதியாகும். இதனால், ஜோகூர் வாக்காளர்களிடையே மொகிதின் யாசின் மீதுள்ள ஆதரவும், அனுதாபமும், லாபிஸ் தொகுதி வாக்காளர்களின் மத்தியிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தக் காரணங்களால் இந்த முறை இராமகிருஷ்ணன் லாபிஸ் தொகுதியில் போட்டியிட்டால் அவரது வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

லாபிஸ் இந்தியர்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இராமகிருஷ்ணன், இந்த முறை ஜசெவின் பாரம்பரிய சீன வாக்காளர்களின் ஆதரவுடனும், மற்றும் துன் மகாதீர், மொகிதின் யாசின் இணைந்த மலாய் வாக்காளர்களின் ஆதரவுடனும், மசீச வேட்பாளருக்கு கடுமையான போட்டியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

– இரா.முத்தரசன்