ஷா ஆலாம் – முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் ஒரு சிலர் கலவரம் புரிந்ததை அடுத்து ஏற்பட்ட அமளியில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பெர்சாத்து கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து பரவலான அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இதன் மூலம் எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தல் எவ்வளவு மோசமானதாக, நெருக்கடி மிக்கத் தேர்தலாக இருக்கப் போகிறது என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கிய இன்றையக் கூட்டத்தில், மாலை 5.30 மணியளவில் துன் மகாதீர் உரையாற்றத் தொடங்கினார். 1985-ஆம் ஆண்டில் நடைபெற்ற மெமாலி பிரச்சனை குறித்து அவர் சில விளக்கங்கள் வழங்க முற்பட்டபோது, மகாதீர் இருந்த மேடையை நோக்கி, சில பொருட்கள் வீசப்பட்டன. செருப்புகள், நாற்காலிகள் வீசப்பட்டதாக இணைய ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியினால் பாதியிலேயே இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மகாதீரும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த அமளியில், மகாதீருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் என நம்பப்படும் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியினருக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்ட டி-சட்டைகளை அணிந்திருந்தனர். இதன் மூலம், யாருக்கும் சந்தேகம் நேராமல் கூட்டத்திற்குள் நுழைந்த அவர்களின் நோக்கம் மகாதீருக்கு காயம் விளைவிப்பதுதான் என பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.
இதற்குக் காரணம், அவர்கள் கலவரம் புரிந்து விட்டு வெளியே ஓடும்போது, தங்களின் டி-சட்டைகளை கழற்றி விட்டு ஓடினார்கள் எனவும் சைட் சாதிக், கூட்ட அமளிக்குப் பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மாலை 5.30 மணியளவில் மகாதீர் மெமாலி விவகாரம் குறித்து விளக்கம் தர முற்பட்டபோது, முதலில் அவர்மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து போத்தல், நாற்காலி போன்ற பொருட்கள் மகாதீர் இருந்த மேடையை நோக்கி வீசப்பட்டன. இருப்பினும், அந்தப் பொருட்கள் எதுவும் மகாதீரை காயப்படுத்தவில்லை. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில் இருந்த மகாதீருக்கு பாதுகாப்பு வழங்கினர்.
மகாதீர் மீது பொருட்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, அதைச் செய்தவர்களை நோக்கி மற்ற பெர்சாத்து கட்சியினர் பாய்ந்தனர். இதனால் கூட்டம் அமளியில் முடிந்தது.
மகாதீர் மகள் மரினா மகாதீரும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தனது கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
-செல்லியல் தொகுப்பு