சிங்கப்பூர் – சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவி, அண்மைய காலமாகத் தனது பேஸ்புக்கில் கூறி வரும் கருத்துகள் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பதோடு, அவர் மிகவும் குழப்பமான மனநிலையில் இருப்பதையும் காட்டியது.
தன்னை மாரியம்மன் என்று கூறிக் கொள்ளும் ரவி, அடிக்கடி பேஸ்புக் நேரலையில் வந்து ஏதாவது ஒரு சர்ச்சையை முன்வைத்து தனது கருத்துகளைக் கூறி வருகின்றார்.
சில நேரம் பெண் வேடமிட்டுக் கொண்டும், சில நேரம் சாமியார் போல் வேடமிட்டுக் கொண்டும் நேரலையில் வந்து பேசும் ரவிக்கு, ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ என்ற மனநலப் பிரச்சினை இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் பலரும் பேஸ்புக்கில் தெரிவித்து வந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு, ரவிக்கு ‘பைபோலார் டிஸ்ஆர்டர்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
ரவியின் சர்ச்சைக்குரிய கருத்துகள் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்குத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர் மீது சக வழக்கறிஞரைத் தாக்கியது, அலுவலக பூட்டை உடைத்தது, தகாத வார்த்தைகள் பேசியது உள்ளிட்ட வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது அவரை இரண்டு வாரங்கள் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பவும் சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.