Home நாடு மகாதீர் மீது காலணி வீசிய சம்பவம்: 3 பேர் கைது!

மகாதீர் மீது காலணி வீசிய சம்பவம்: 3 பேர் கைது!

810
0
SHARE
Ad

mahathir-zahid-comboகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்து கொண்ட ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ நிகழ்ச்சியில், அவரை நோக்கி காலணிகள் வீசப்பட்ட சம்பவத்தில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் மூவரும் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என ஷா ஆலம் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி ராஜா நூர் அதிலா நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் தப்ப முடியாது

#TamilSchoolmychoice

இதனிடையே, மகாதீர் கலந்து கொண்ட அந்நிகழ்ச்சியில் கலாட்டா செய்தவர்களும், அதற்குத் தூண்டியவர்களும் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி உறுதியளித்திருக்கிறார்.

அச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் ஷா ஆலம்,செக்‌ஷன் 7, ராஜா மூடா மூசா அரங்கில் ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற விவாத நிகழ்ச்சி தொடங்கியது.

மாலை 5.30 மணியளவில் துன் மகாதீர் உரையாற்றத் தொடங்கினார். 1985-ஆம் ஆண்டில் நடைபெற்ற மெமாலி பிரச்சனை குறித்து அவர் சில விளக்கங்கள் வழங்க முற்பட்டபோது, மகாதீர் இருந்த மேடையை நோக்கி, சில பொருட்கள் வீசப்பட்டன. செருப்புகள், நாற்காலிகள் வீசப்பட்டதாக இணைய ஊடகங்களும், சமூக ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியினால் பாதியிலேயே இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மகாதீரும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த அமளியில், மகாதீருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.