Home நாடு மாபெரும் சட்டதிருத்த மாற்றங்களுக்குத் தயாராகிறது மஇகா!

மாபெரும் சட்டதிருத்த மாற்றங்களுக்குத் தயாராகிறது மஇகா!

904
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ம இ கா வின் தேசியத் தலைவர் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி கிளைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும் என ம இ காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13 ஆகஸ்ட் 2017) நடைபெற்ற மஇகா மலாக்கா மாநில மாநாட்டில் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்தக் கட்சி மாபெரும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராகி வருவது உறுதியாகியுள்ளது.

mic-melaka-state-agm-13082017 (1)ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெற்ற மஇகா மலாக்கா மாநில மாநாட்டில் டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்…

நீண்ட காலமாக இந்த விவகாரம் கட்சி வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வந்தாலும், இதுவரை இதற்கான முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், எதிர்வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேசியப் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறும் வண்ணம் சட்டத் திருத்த வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

வெளிப்படையான விவாதங்களுக்குப் பின்னர் சட்டத் திருத்தங்கள்

கடந்த காலங்களைப் போன்று இரகசியமாகவோ, உள்நோக்கத்தோடு, ஓரிருவராலோ கையாளப்படாமல் இந்த முறை ஒட்டுமொத்த மத்திய செயற்குழுவும் பங்கு பெறும் வண்ணம் சட்டத் திருத்தங்கள் தயாராகி வருகின்றன.

mic-melaka-state-agm-13082017 (2)மஇகா மலாக்கா மாநில மாநாட்டில் டாக்டர் சுப்ரா உரை நிகழ்த்துகிறார்…

சட்டத் திருத்தங்கள் எப்படி இருக்க வேண்டும், கட்சி வலுவான கட்டமைப்போடு திகழ வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கோடி காட்டியதோடு, டாக்டர் சுப்ரா இது குறித்து அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களும் பங்கு பெற்று கருத்து சொல்லும் வண்ணம் வெளிப்படைத் தன்மையுடன் இந்தச் சட்டத் திருத்தங்களைக் கையாண்டு வருகிறார் எனவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

சில வாரங்களுக்கு முன்னர் இதற்காக பிரத்தியேக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் மத்திய செயலவை உறுப்பினர்களும், கட்சியின் கட்டமைப்பு, சட்ட நுணுக்கங்கள் போன்றவற்றில் அனுபவம் வாய்ந்த ஒரு சிலரும் அழைக்கப்பட்டு இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.

பின்னர் இந்தக் கலந்துரையாடல் பங்கேற்பாளர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து, கிளைகள், தொகுதிகள், மத்திய செயலவை ஆகிய பிரிவுகளில் தனித் தனியாக விவாதங்கள் நடத்தி தங்களின் குழுத் தலைவர்கள் மூலம் தங்களின் பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

MIC Constitution edited photoஏறத்தாழ 5 மணி நேரம் இந்த விவாதங்கள் நடத்தப்பட்டு, சட்டத் திருத்தங்கள் முழுமையான வடிவத்திற்கு வந்திருப்பதாகவும், மேலும் சில திருத்தங்களோடு இந்த சட்டத்திருத்தங்கள் அடுத்த மத்திய செயலவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதலைப் பெற்ற பின்னர், எதிர்வரும் தேசியப் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்துதான், மலாக்கா மாநாட்டில் சட்டத் திருத்தங்கள் குறித்த அறிவிப்பை டாக்டர் சுப்ரா வெளியிட்டிருக்கிறார்.

சட்டத் திருத்தங்களின் முக்கிய அம்சங்கள் என்ன?

MIC-logoதேசியப் பேராளர் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும், கட்சித் தேர்தல் முறைகளையும் மாற்றியமைக்கும் வண்ணம் இந்த சட்டத் திருத்தங்கள் அமைந்திருக்கும் என்பதோடு கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

  • தொகுதி நிலையில் தேர்தல்கள் இல்லாமல், தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது;
  • மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு நேரடித் தேர்தல்;
  • அனைத்து கட்சித் தேர்தல்களிலும் கிளைத் தலைவர்கள் நேரடியாக பங்கு பெற்று வாக்களிக்கும் வண்ணம் பேராளர் தேர்வு நடைமுறையை ஒழிப்பது:

புதிய சட்டத் திருத்தங்கள் அமுலுக்கு வந்த பின்னர், கிளைத் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்பதால் கட்சியின் உட்கட்டமைப்பு மேலும் வலுவாகும் என்பதுடன், கட்சி நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகாவின் கடந்த கால சட்டத் திருத்த வரலாறு

1973-ஆம் ஆண்டில் மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் பதவியேற்ற பின்னர் மேற்கொண்ட மாபெரும் உட்கட்சித் சீர்திருத்தங்களில் தலையானது மஇகா வின் சட்டவிதிகள் முறையாகத் திருத்தப்பட்டு, வடிவமைக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

இன்று கட்சியில் இருக்கும் பெரும்பாலான கட்டமைப்பும், சட்டவிதிகளும் அப்போது டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தலைமையில் இயங்கிய சட்ட அறிஞர் குழுவும், அரசியல் குழுவும் இணைந்து உருவாக்கியதாகும்.

உதாரணமாக, இன்று கிளைகளுக்கு அங்கீகாரமாக வழங்கப்படும் ‘பி-பாரம்’ எனப்படும் நடைமுறை அப்போதைய சட்டத் திருத்தங்களினால் உருவானதாகும்.

அதன் பின்னர் 1979-ஆம் ஆண்டில் மஇகா தேசியத் தலைவராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு சட்டத் திருத்தங்களில் முதலில் சில சிறிய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

ஆனால், 1990-ஆம் ஆண்டுகளில் இன்றைக்கிருக்கும் மஇகா தொகுதி முறை கட்டமைப்பையும், தேர்தல் முறைகளையும் உள்ளடக்கிய மிகப் பெரிய மாற்றங்களை கட்சியின் சட்டத் திருத்தங்கள் மூலம் சாமிவேலு கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அடுத்த கட்டத்திற்கு மஇகாவை நகர்த்திச் செல்லும் வியூகமாக, கட்சியின் உட் கட்டமைப்பையே மாற்றியமைக்கும் விதமாக மாபெரும் சட்டத் திருத்தங்களுக்கு மஇகா தயாராகி வருகிறது.

-இரா.முத்தரசன்