ஜார்ஜ் டவுன், மார்ச் 25 – தேசிய முன்னணி கட்சியின் சார்பாக நேற்று பினாங்கு மாநிலத்தில் படாங் கோத்தா என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், 5000 திற்கும் அதிகமான மக்கள் திரண்டு தேசிய முன்னணி அரசுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் தொடங்கிய இம்மாநாட்டில் பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோர் முகமட் யாக்கோப் கலந்து கொண்டார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இம்மாநாட்டில் பினாங்கு தேசிய முன்னணி தலைவர் டெங் சாங் யாவ், பினாங்கு மாநில அம்னோ தலைவர் டத்தோ ஜைனல் அபிதின் ஓஸ்மான் மற்றும் பினாங்கு மாநில ம.இ.கா துணைத் தலைவர் எல்.கிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு, பினாங்கு மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களிடம் உரையாற்றினர்.
இம்மாநாட்டில் பேசிய பினாங்கு தேசிய முன்னணி தலைவர் டெங் சாங் யாவ்,கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், எதிர்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பல திட்டங்களை பினாங்கு மாநிலத்தில் செயல்படுத்தத் தவறிவிட்டன.
எனவே இம்முறை தேசிய முன்னணி அரசை மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பல புதிய பொருளாதாரத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இங்கு திரண்டிருக்கும் கூட்டத்தைப் பார்க்கும் போது, மக்கள் தேசிய முன்னணி அரசை வெற்றியடையச் செய்ய தயாராகி விட்டதாக பின்னர் டெங் செய்தியாளர்களிடம் கூறினார்.