சென்னை – முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டாக உடைந்திருந்த அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியும், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் நேற்று திங்கட்கிழமை கைகுலுக்கி இணைந்தனர்.
இதனையடுத்து அதிமுக நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன் படி, ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகிப்பார் என அதிமுக நிர்வாகத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதேபோல், மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பதவியும், நிதியமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு வீட்டுவசதித்துறையின் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை அதிமுக தலைமையகத்தில் கூட்டம் நிறைவடைந்தவுடன், ஓபிஎஸ் அணியினரும், இபிஎஸ் அணியினரும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஆளுநர் மாளிகை சென்று, தமிழக ஆளுநர் வித்யாசாகர் முன்னிலையில், ஓபிஎஸ், மாஃபா பாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.