சென்னை – ‘விவேகம்’ வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லவா வேண்டும்?
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இப்போதே அஜித் ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராகிவிட்டார்கள்.
இந்நிலையில், கோயம்பத்தூர் அஜித் ரசிகர்கள் ஒரு திடீர் அறிவிப்பை அவர்களின் பேஸ்புக் வாயிலாக வெளியிட்டிருக்கின்றனர்.
அது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருப்பதோடு, ரசிகர்களின் இந்த திடீர் மனமாற்றத்தை எண்ணி மகிழ்ச்சியடையவும் வைத்திருக்கிறது.
கோயம்பத்தூர் அஜித் ரசிகர்கள் கூறியிருப்பதாவது:-
“விவேகம் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பவர்கள் பால் அபிஷேகத்தைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக இரயில் நிலையங்களில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருப்பவர்களுக்கு பால் வாங்கிக் கொடுக்கவும். 20 ரூபாய்க்கு கூட அரிசி விற்கிறார்கள். அவற்றை வாங்கி ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கவும். உங்கள் மகிழ்ச்சியை கலர் பேப்பர்களையும், ஸ்ப்ரே பொருட்களையும் வைத்து கொண்டாடவும். நாம் எப்பவும் தல அஜித்தின் வழியில் நடப்போம்” என்று தெரிவித்திருக்கின்றனர்.
நல்ல விசயம் தானே? மற்ற மாவட்ட ரசிகர் மன்றங்களும் இதனைப் பின்பற்றலாமே?