Home கலை உலகம் திரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே! காரணம் என்ன?

திரைவிமர்சனம்: விவேகம் – 80 நாடுகளால் தேடப்படும் ஏகே! காரணம் என்ன?

1678
0
SHARE
Ad

Vivegam-stillகோலாலம்பூர் – தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று, முக்கால்வாசிப் படம் கடும் பனி பொழியும் பிரதேசங்களான பல்கேரியா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பிரம்மாண்டத் திரைப்படமாகத் தெரிகின்றது சிவா இயக்கத்தில், தல அஜித்குமார் நடித்திருக்கும் ‘விவேகம்’.

உலகின் 80 நாடுகளால் தேடப்படும் குற்றவாளியாகிறார் இராணுவத்தில் இரகசியப் பிரிவில் பயிற்சி பெற்ற அஜய்குமார் சுருக்கமாக ஏகே. உலகநாடுகள் அவரைத் தேடுவதற்கான காரணம் என்ன? அவரால் என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது தான் படத்தின் சுவாரசியம்.

முழுக்க முழுக்க இராணுவம், அணு ஆயுதம், சம்பந்தப்பட்ட கதை என்பதால், படம் தொடங்கியது முதல் முடிவு வரை துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் வெடித்தபடியே தான் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

அதுமட்டுமா? ஓர் அறையில் இருந்தபடியே, உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வில்லனுக்கு பல அதிநவீன தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் ஆக்சன் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு அந்தத் தொழில்நுட்பங்கள் அவ்வளவு புதிதாய் தெரியாது என்றாலும், தமிழ் சினிமாவில் அவை கொண்டு வரப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் அரைமணி நேரம், அந்தச் சத்தங்களுக்கும், சண்டைக்காட்சிகளுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் பழகுவதற்கு சற்று சிரமப்பட்டாலும் கூட, அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருப்பதால் பழகி விடுகின்றோம்.

என்றாலும்,முழுக்க முழுக்க தொழில்நுட்பங்களோடு கதை பின்னிப் பிணைந்திருப்பதால், சில தரப்பு ரசிகர்களுக்கு அவை புரியாமல் எரிச்சலை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. காரணம், படத்தில் அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகளில் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகிறார்கள். அது சாதாரண ரசிகர்களைச் சென்றடைவது சற்று சிரமம் தான்.

Vivegam ajithஅடுத்ததாக, இவ்வளவு கட்டுமஸ்தான, கரடுமுரடான அஜித்தை பார்ப்பதற்குப் புதிதாக இருக்கிறது. நிச்சயமாக தல ரசிகர்களுக்கு விருந்து தான். குறிப்பாக அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களைக் கொண்டாட வைப்பதோடு, தன்னம்பிக்கை அளிக்கும் வரிகளாக இருக்கின்றன.

அதற்காக இயக்குநர் சிவாவிற்கும், கபிலன் வைரமுத்துவிற்கும் தனி பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.

“இந்த உலகமே நீ தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும், நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன யாராலும் ஜெயிக்க முடியாது”

“உள்ள இறங்குன தோட்டா வலிக்கலடா.. துரோகம் தான் வலிக்குது”

“நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் நீ ஆள்றதுக்குப் பயன்படுத்துற.. நான் வாழ்றதுக்குப் பயன்படுத்துறேன்”

இப்படியாக நச்சென்று மனதில் பதியும் வசனங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Vivegam trailerகாஜல் அகர்வாலின் நடிப்பு அழகு. அதிலும் சமிக்ஞை பாஷையில் அஜித்துடன் பேசிக் கொள்வது, அஜித்தின் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பது, அஜித்தின் சிறு அசைவையும் புரிந்து கொள்வது என அழகான நடிப்பு. இன்றைய காலத்தில் இப்படிப்பட்ட குணாதியங்களுடன் கூடிய மனைவி கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை சிவாவையே சேரும். அக்‌ஷராஹாசனும், கருணாகரனும் சில காட்சிகளே வந்தாலும் அவர்களின் இருப்பு ரசிக்க வைக்கின்றது.

விவேக் ஓபுராய்.. ஹீரோவுக்கு நிகரான முகவெட்டும், உடல்மொழியும், நடிப்பும் அருமை. அஜித்துடனான அந்த ‘நண்பா’ செண்டிமெண்டும், அதை வைத்தே அஜித்தின் புகழ் பாடுவதுமாக நடித்திருக்கிறார். பாகுபலி பிரபாசுக்கு குரல் கொடுத்தவரே விவேக் ஓபுராய்க்கும் கொடுத்திருக்கிறார். அது டப்பிங் பட சாயலை ஏற்படுத்துகிறது.

வெற்றியின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்ட பக்க பலமாக இருக்கிறது.

மிகப் பெரிய பாலம், மலை உச்சி வீடுகள், கடும் பனி பொழியும் காட்டுப் பகுதி, அதேவேளையில், மெய்சிலிர்க்கும் படியான சண்டைக்காட்சிகள் என வெற்றியின் ஒளிப்பதிவு அபாரம்.

வியந்து பார்ப்பதற்கு இவ்வளவு விசயங்கள் இருந்தும் கூட, ரசிகன் சற்று இளைப்பாருவதற்கும், ஒரு பொழுதுபோக்காக அமர்ந்து ரசிப்பதற்குமான காட்சிகள் மிகக் குறைவு.

அஜித்தை ‘ஒன் மேன் ஆர்மி’ போல் ஒரே ஆளே, அத்தனை நவீன தொழில்நுட்ப சக்திகளையும் முறியடித்துவிட்டு, அணு ஆயுதத்தை எதிர்கொள்வதெல்லாம் ரொம்ப மிகைப்படுத்தியிருப்பதாகவே தெரிகின்றது. அதிலும் அஜித் அறிமுக காட்சியில் பாலத்தில் இருந்து குதிப்பதெல்லாம் குபீர் சிரிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. அக்காட்சியை இன்னும் நம்பும்படியாக எடுத்திருக்கலாம்.

படம் மிகவும் மாஸ் ஆக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் கதையில் பலவற்றைப் புகுத்தி இயக்குநர் சிவா மிகைப்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்