கோலாலம்பூர் – நாடறிந்த தமிழ்ப் பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லிம் நேற்று புதன்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
டத்தோ ஹாஜி தஸ்லிமின் மறைவிற்கு சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் சுப்ரா தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“எனது நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த டத்தோ ஹாஜி தஸ்லிம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். இந்தியர்களின் உரிமைகளுக்காக எப்போதும் அஞ்சாமல் முன்னின்று போராடியவர் அவர்”
“கடந்த பல வருடங்களில் அவருடன் பல விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்கவும், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ‘பிறப்பால் நான் தமிழன், மதத்தால் நான் ஒரு முஸ்லீம்’ என்ற அவரது நிலைப்பாடும் – தமிழ் மொழிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், அயராது அவர் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும் என்றும் நமது நினைவுகளில் நீங்காமல் நிறைந்திருக்கும்”
“அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என டாக்டர் சுப்ரா ஹாஜி தஸ்லீம் குறித்து இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
நன்றி – டாக்டர்சுப்ரா.காம்