Home நாடு ஹாஜி தஸ்லீம் நல்லடக்கச் சடங்குகள்!

ஹாஜி தஸ்லீம் நல்லடக்கச் சடங்குகள்!

1481
0
SHARE
Ad

Haji Taslim-deceasedபெட்டாலிங் ஜெயா – நாடறிந்த தமிழ்ப் பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்களின் நல்லடக்கச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

பொதுமக்கள், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் காலை 9.00 முதல் பிற்பகல் 1.20 வரை அவரது நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தலாம்.

அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் புக்கிட் கியாரா முஸ்லீம் மயானக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை (23 ஆகஸ்ட் 2017) இரவு 10.08 மணியளவில் டாமன்சாரா கேபிஜே ஸ்பெஷலிட்ஸ் மருத்துவமனையில் ஹாஜி தஸ்லீம் காலமானார். அவருக்கு வயது 68.

தமிழுக்காகப் போராடியவர்

Taslim-Hajiஎப்போதுமே தன்னை ஒரு தமிழன் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகள் என்ற கோணத்திலும், இந்திய சமூகம் என்ற ஒருமித்த பார்வையிலும் அயராது சமுதாய சேவையாற்றியவர் தஸ்லீம்.

அதனால்தான், மதம் கடந்து அவர் அனைவராலும் அவர் போற்றப்படுகின்றார். எல்லா அரசியல் கட்சிகளிலும் அவருக்கு நண்பர்களும், அவருக்கு மரியாதை தந்தவர்களும் இருந்தார்கள்.

நேற்று அவர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தார் எனத் தகவல்கள் வெளிவரத் தொடங்கியது முதல் நேற்றிரவு அவர் காலமானார் என்ற செய்தி உறுதிப்படுத்தப்பட்டதுவரை – முகநூல் போன்ற சமூக ஊடங்களிலும், குறுஞ்செய்திகளின் வழியும், அவரைக் கொண்டாடியவர்கள், போற்றியவர்கள், அவரது இழப்பை சமுதாயத்தின் இழப்பாகக் கருதி செய்தி வெளியிட்டவர்கள் – போன்றவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம் அல்லாத நண்பர்கள், ஆதரவாளர்கள் என்பதிலிருந்து அவரது பெருமையும், அவரது உண்மையான பணிகளின் தாக்கமும் நமக்குப் புலப்படுகின்றது.

‘இண்டர்லோக்’ நாவல் விவகாரம், ‘பைபிள்’ நூல்களை சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா கைப்பற்றிய விவகாரம், ஒருதலைப்பட்ச மதமாற்ற விவகாரங்கள் போன்றவற்றில் அவர் மத உணர்வுகளைக் கடந்து மனித நேயத்திற்கும், ஒட்டுமொத்த சமுதாய நலனுக்கும் முக்கியத்துவம் தந்து கருத்துகளைத் துணிந்து வெளியிட்டார்.

தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது, பலமுறை போராட்டக் களங்களில் மக்களோடு மக்களாக நின்றிருக்கின்றார்.

இளம் வயதில் சாதாரண வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் தொழிலதிபராக உருமாறிய பின்னரும், வசதிகள், செல்வங்கள் பெருகியபோதிலும், தான் சார்ந்த சமுதாயமும் நன்மை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பல அறப்பணிகளைச் செய்தார். பல தமிழ்ப் பள்ளிகளைத் தத்தெடுத்தார். இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை அவர் தத்தெடுத்தார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பல குழந்தைகளையும் அவரே நேரடியாகத் தத்தெடுத்தார்.

இவ்வாறான பல பெருமைகளைக் கொண்ட ஹாஜி தஸ்லீம் அவர்களின் தமிழ்ப் பணிகளுக்குத் தலைவணங்கி, அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பாக எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.