சென்னை: என்று வரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விடாமுயற்சி ஒருவழியாக எதிர்வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தமிழ் நாட்டில் முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகளுக்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. படத்திற்கான முன்பதிவுகள் மிக அதிக அளவில் செய்யப்படுவதாகவும் படம் சிறப்பாக இருந்தால் வசூலில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் படத்திற்கான விளம்பரங்களும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. படத்திற்கான முன்னோட்டம் வெளியீடு எதுவும் இல்லை என்பது அஜித் கடைப்பிடிக்கும் பாணி. படத்திற்கான விளம்பரங்களில் ஈடுபடுவதில்லை என்பதும் படம் குறித்து எந்தவித பேட்டிகளை வழங்குவதில்லை என்பதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதும் அஜித் நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வரும் கொள்கை. விடாமுயற்சி திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
எனினும் பல்வேறு கோணங்களில் படத்திற்கான விளம்பரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மலேசியாவில் விடாமுயற்சி பட விளம்பரத்தை ஓவியமாகத் தீட்டிய கார்களின் அணிவகுப்பு ஒன்று பட வெளியீட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தக் கார்களின் அணிவகுப்பு அண்மையில் கோலாலம்பூரின் வீதிகளில் நடத்தப்பட்டது. அதனை படத் தயாரிப்பாளர்கள் தங்களின் யூடியூப் தளத்தில் பதிவு செய்திருக்கின்றனர்.
அந்தத் தகவல் குறித்த மேல் விவரங்களை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: