புதுடில்லி – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற புதிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் சியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள சீனா புறப்பட்டு சென்றார்.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா, ரஷியா ஆகிய உலகின் பெரிய நாடுகள் ஐந்தும் இணைந்து வணிகக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதற்கு பிரிக்ஸ் (BRICS) எனப் பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டின் ஆங்கில முதல் எழுத்தையும் இணைத்து இந்தக் கூட்டமைப்பின் பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்ளும் உச்ச நிலை மாநாடு, சீனாவின் சியாமென் (Xiamen) நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் மோடி, மாநாட்டின் இடைவேளையில் சீனாவின் அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சீனாவுடன், எல்லைத் தகராறுகள் முற்றியிருக்கும் நிலையில், மோடி, ஜின் பிங் இடையிலான சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மோடியின் மியன்மார் வருகை
சீனா வருகையை முடித்துக் கொண்டு மோடி, செப்டம்பர் 5 முதல் 7-ஆம் தேதிவரை மியன்மார் நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை ஒன்றை மேற்கொள்கிறார்.
மியன்மார் நாட்டின் வரலாற்று நகரான பாகான் நகருக்கு வருகை தரும் மோடி தலைநகர் யாங்கூனுக்கும் வருகை தந்து மியன்மார் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.
மியன்மார் நாட்டின் இந்திய சமுதாயத்தினருடன் சந்திப்பு ஒன்றை நடத்தி அவர்களிடையே மோடி உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
- செல்லியல் தொகுப்பு