புதுடில்லி – நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் தமிழரான நிர்மலா சீதாராமன் தற்காப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிகார பலம் மிக்க இந்தியத் தற்காப்பு அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண்மணி நிர்மலா சீதாராமன் ஆவார்.
இதற்கு முன்னர் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தற்காப்புத் துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.
- நிதியமைச்சராகவும், தற்காப்பு அமைச்சராகவும் இரட்டைப் பொறுப்பு வகித்த அருண் ஜெட்லி தொடர்ந்து நிதியமைச்சராக மட்டும் பொறுப்பு வகிப்பார்.
- இதற்கிடையில் பியூஷ் கோயல் இரயில்வே அமைச்சராக பொறுப்பேற்பார். இரயில்வே அமைச்சராக இதுவரை பதவி வகித்த சுரேஷ் பிரபு வாணிபத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
- தர்மேந்திரா பிரதான் மனித ஆற்றல் மேம்பாடு மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
- நிதின் கட்காரி நீர்வளத் துறை அமைச்சராகிறார். இதற்கு முன்னர் உமா பாரதி இந்தப் பதவியை வகித்து வந்தார். உமா பாரதி குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு துறைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
- ஸ்மிருதி இராணி தகவல், ஒளிபரப்பு மற்றும் ஜவுளித் துறை அமைச்சுப் பொறுப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.