சபா,மார்ச் 25 – சபா மாநிலத்தில் ‘மை கார்டு’ திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப்பெற்று, உண்மையான சபா வாசிகளுக்கு மட்டும் அதை திரும்பக் கொடுக்க, அம்மாநிலத்தின் தேசிய முன்னணியை அரசைச் சேர்ந்த மூன்று முக்கியக் கட்சிகளான அப்கோ (United Pasok Momogun Kadazandusun Murut Organisation), பி.பி.எஸ் (Parti Bersatu Sabah) மற்றும் பி.பி.ஆர்.எஸ் (Parti Bersatu Rakyat Sabah) ஆகியவை முன்வந்துள்ளன.
இது தொடர்பாக அப்கோ கட்சியின் தலைவர் பெர்னார்ட் டொம்போக், போர்னியோ போஸ்ட் என்ற நாளிதழ் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“அடையாள அட்டைகளைத் திரும்பப்பெறும் இந்நடவடிக்கையின் மூலம், கள்ளத் தனமாக அடையாளஅட்டை பெற்றவர்கள் கண்டறியப்பட்டு, பின் உண்மையான சபா மக்களுக்கு மீண்டும் அடையாள அட்டை திரும்பத் தரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் சேர்ந்து பி.பி.எஸ் தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் மற்றும் பி.பி.ஆர். எஸ் தலைவர் ஜோசப் குருப் ஆகியோரும் இந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.