கோலாலம்பூர், செப் 19 – சபா அடையாள அட்டை விவகாரத்தில் கடந்த வாரம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
கோத்தா கினபாலு நீதிமன்ற வளாகத்தில், சபா, சரவாக் மாநில முன்னாள் தலைமை நீதிபதி ஸ்டீவ் ஷிம் தலைமையில், அரச விசாரணை ஆணையத்தின் முன் அன்வார் இன்று சாட்சியம் அளிப்பார்.
மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் சபா, சரவாக் மாநிலங்களில் குடியேறிய பல இஸ்லாம் மக்களுக்கு சட்டத்திற்கு விரோதமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த புதன்கிழமை அரச விசாரணம் ஆணையத்திடம் சாட்சியம் அளித்த மகாதீர், தனக்கும், இந்த அடையாள அட்டை விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும், தனது பெயரை பலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
சாட்சியம் அளித்த மறுநாள் மகாதீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது போன்று சட்டவிரோதமாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பின், அப்போது துணைப்பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் அதை ஏன் தடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்னர் அன்வாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாள அட்டை விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், இந்த விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்டதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில், அன்வார் இப்ராகிம் துணைப்பிரதமர் பதவி வகித்தார். அப்போது அன்வார் மீது சுமத்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு காரணமாக 1998 ஆம் ஆண்டு மகாதீர் அவரை பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.