சென்னை – மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவ மாணவர்கள் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
இது குறித்து சிஎம்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீட் தேர்வு முறையில் மாணவர் சேர்க்கை என்பது அரசியலமைப்புச் சட்டம் 30(1) -வது விதி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமைகளுக்கு எதிரானது” என்று தெரிவித்திருக்கிறது.
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், 5 ஆண்டு படிப்பை நிறைவு செய்தவுடன், சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆனால் தற்போது நீட் தேர்வு முறைப்படி மாணவர்களைச் சேர்த்தால் அவ்வாறு மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியாது என்பதால் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இம்முடிவை எடுத்திருக்கிறது.