புத்ரா ஜெயா, மார்ச் 25 – மலேசிய அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரதமர் நஜிப்புக்கும், ஹிண்ட்ராப் இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் இலாகாவில் நடந்தேறியது.
ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளையும், இந்திய சமுதாயத்திற்கான அதன் ஐந்தாண்டு திட்ட வரைவினையும் தேசிய முன்னணி அல்லது மக்கள் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப்பின் தலைவர் பி.வேதமூர்த்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடனான ஒரு மணி நேர சந்திப்பில் வேதமூர்த்தியும் இன்று கலந்து கொண்டார். இருப்பினும் இன்றைய சந்திப்பின் முழுவிவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதோடு அந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்தும் இதுவரை எந்த வித அறிவிப்பும் எந்த தரப்பிலிருந்தும் வெளிவரவில்லை.
அடுத்த சில நாட்களில் மேலும் சில சந்திப்புக்களைத் தொடர்ந்து நடத்துவதற்கும், சில சர்ச்சைக்குரிய விவகாரங்கள் மீது தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கும் இருதரப்புகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக ஹிண்ட்ராப்பின் தேசிய ஆலோசகர் என்.கணேசன் கூறியதாக மலேசியகினி செய்தித் தளம் வெளியிட்ட செய்தியொன்று கூறுகின்றது.
ஆனால் அடுத்த சந்திப்பு எப்போது நிகழும் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என வேதமூர்த்தி அறிவித்திருந்தாலும், பிரதமர் ஹிண்ட்ராப்புடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளதால் அதனைத் தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவார் என்ற நம்பிக்கையும் எழுந்துள்ளது.
தேசிய முன்னணி – ஹிண்ட்ராப் சந்திப்பால் சாதகங்கள் உண்டா?
ஹிண்ட்ராப்புடன், தேசிய முன்னணி அரசு சந்திப்பு நடத்தியிருந்தாலும், எந்த அளவுக்கு முன்வந்து ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் என்பது தெரியவில்லை.
காரணம் அந்த கோரிக்கைகளில் சில அரசியல் சார்புடையவை என்பதால், தனது நீண்ட கால அரசியல் பங்காளிக் கட்சியான ம.இ.கா.வின் அனுமதியோ ஆதரவோ இல்லாமல் ஹிண்ட்ராப்பின் கோரிக்கைகளை அப்படியே தேசிய முன்னணி தலைமைத்துவம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் சாத்தியம் இல்லை.
அதேவேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் தேசிய முன்னணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அதனால் அதன் ஆதரவு வாக்குகள் அப்படியே தேசிய முன்னணிக்கு விழுமா என்பதும் கேள்விக் குறிதான்!
காரணம், ஹிண்ட்ராப் ஆதரவாளர்களில் பலர் இன்னும் தேசிய முன்னணிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் என்பதோடு, மக்கள் கூட்டணிக்கு அடுத்த வாய்ப்பு தர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.