Home நாடு பக்காத்தானில் ஹிண்ட்ராப் இன்னும் இணையவில்லை

பக்காத்தானில் ஹிண்ட்ராப் இன்னும் இணையவில்லை

886
0
SHARE
Ad

Hindraf-Waytha-logo-Featureகோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்குத் தன்னுடன் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தாலும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்கு இன்னும் ஹிண்ட்ராப் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை என பக்காத்தான் கூட்டணித் தலைவர் துன் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை (10 செப்டம்பர் 2017) கோலாலம்பூரில் நடைபெற்ற பக்காத்தான் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் மகாதீர் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி, மகாதீருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கும் இடையிலான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து வேதமூர்த்தியின் ஹிண்ட்ராப், ஐந்தாவது கூட்டணிக் கட்சியாக பக்காத்தானில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

#TamilSchoolmychoice

எனினும் ஹிண்ட்ராப் இன்னும் அரசியல் கட்சியாக உருமாற்றம் பெறவில்லை என்பதும், ஓர் அரசு சாரா இயக்கமாகவே இன்னும் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த அமைப்பு பக்காத்தானின் தேர்தல் இயந்திரத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என மகாதீர் கூறியதாக பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.

“பக்காத்தானில் இந்திய சமுதாயம் போதுமான அளவுக்கு பிரதிநிதிக்கப்படவில்லை என்பதை உணர்ந்துள்ளோம். இந்தியர் கட்சி என்று எதுவும் பக்காத்தானில் இல்லை. பல இன கட்சிகளில் இந்தியர்கள் இருந்தாலும் அவர்கள் போதுமான அளவுக்கு பங்கு பெறவில்லை. ஹிண்ட்ராப் இயக்கம் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களின் ஆதரவைப் பெறாவிட்டாலும், சாதாரண தோட்டப்புற மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டிருக்கிறோம். எனவே, கூட்டணிக் கட்சியாக இணைக்க முடியாவிட்டாலும், ஹிண்ட்ராப்பை எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளே கொண்டுவர நாங்கள் பாடுபட்டு வருகிறோம்” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.