பெங்களூர் – சென்னையில் செவ்வாய்க்கிழமை முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி, பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்குத் தொடுத்தார்.
அதனையடுத்து, அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்காலத் தடை விதித்து பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 13-க்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் பெங்களூரு நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு தங்களைக் கட்டுப்படுத்தாது என முதல்வர் பழனிசாமியின் வழக்கறிஞர் விளக்கம் அளித்திருக்கிறார். காரணம் தமிழகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு கர்நாடக நீதிமன்றம் எதிராகத் தடை விதிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி அதிமுக பொதுக் குழு கூடுகிறது.