சென்னை – நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்த அணியினரின் பொதுக் குழுக் கூட்டத்திற்குத் தடைவிதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தது.
அந்தப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் பி.வெற்றிவேல் வழக்கைத் தொடுத்திருந்தார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கில் தேவையற்ற இந்த வழக்கை வெற்றிவேல் தொடுத்திருக்கிறார் என்றும் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், இதற்காக அவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.
நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து மேற்கண்ட தீர்ப்புகளை வழங்கினார்.
அரசியல் கட்சிகளின் அணித் தலைவர்கள் இதுபோன்று பின்னணியில் செயல்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களை வைத்து வழக்கு தொடுக்கும் போக்கையும் நீதிமன்றம் கண்டித்தது.
வழக்கு தொடுத்திருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நாளைய பொதுக் குழுவில் அழைப்பினை ஏற்று கலந்து கொள்ளலாம் அல்லது, அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் வழங்கும் விருந்தைச் சுவைத்து விட்டுச் செல்லலாம் – மாறாக, இவ்வாறு தடை கோரி வழக்கு தொடுப்பது அவசியமில்லாதது என நீதிபதி கடுமையாகத் தெரிவித்தார்.
இந்த முடிவு டிடிவி தினகரனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை கூடவிருக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணையின் பொதுக் குழு சில முக்கிய முடிவுகளை எடுக்கும் என்றும் சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்கும் முடிவும் அதில் ஒன்று என அதிமுக வட்டாரங்கள் ஆரூடங்கள் வெளியிட்டு வருகின்றன.