புத்ரா ஜெயா – மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு வியூகத் திட்டங்களை வகுத்துள்ள இந்தியன் புளுபிரிண்ட் எனப்படும் மலேசிய இந்தியர்களுக்கான வியூகத் திட்டக் குழு, சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட மலேசிய இந்திய சமூக நடவடிக்கைத் திட்டக் குழுவின் கலந்தாலோசனைக் கூட்டத்தை நேற்று செவ்வாய்க்கிழமை புத்ரா ஜெயாவில் நடத்தியது.
இக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற மஇகா தேசியத் தலைவரும், புளுபிரிண்ட் திட்டச் செயலாக்கக் குழுவின் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இந்நாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 200 கோடி (2 பில்லியன்) அமானா சஹாம் பங்குகள் ஒதுக்கப்படுவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமூக நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் வரையப்பட்ட வளர்ச்சி திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறிய அவர், இந்த அமானா சஹாம் பங்குகளை பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.பி – Permodalan Nasional Berhad) வெளியிடும் என கூறினார்.
அரசாங்கம் அறிவித்துள்ள இந்தியர்களுக்கான வியூக செயல் திட்டத்தின் கீழ் செயல்படும் பொருளாதாரப் பிரிவு, பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்டுடன் இணைந்து அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்தியர்களுக்காக சிறப்பு முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது. அந்த முதலீட்டுத் திட்டம் இரு பிரிவுகளாக அமல்படுத்தப்படும் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
முதல் பிரிவாக பி-40 (B-40) என்ற அடித்தட்டு நிலையில் உள்ள இந்தியர்களுக்கான சிறப்பு சேமிப்பு முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் முதலீடு செய்கின்றவர்களுக்கு அரசாங்கக் கடனுதவி ஏற்படுத்தித் தரப்படும். இதற்காக செடிக் அரசாங்கத்திடம் 2 பில்லியன் ரிங்கிட்டை சிறப்பு நிதியாகக் கோரவிருக்கிறது. புளுபிரிண்ட் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் இத்திட்டம் குறித்து அறிவித்திருப்பதால் அடுத்த மாதம் மக்களவையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது இதற்கான அறிவிப்பையும் நிதியமைச்சர் என்ற முறையில் பிரதமர் வெளியிடுவார் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
இரண்டாவது பிரிவாக, பெர்மோடாலான் நேசனல் பெர்ஹாட் அறிமுகப்படுத்தியுள்ள இதர அமானா சாஹாம் முதலீட்டுத் திட்டங்கள் போல அதிக லாபத்தை கொண்ட முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதும் இந்தக் கோரிக்கையில் அடங்கும்.
இவ்விவகாரம் தொடர்பாக செடிக் அதிகாரிகள் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தியுள்ளனர். அவர்களும் இத்திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர் என டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.
முதலாவது பிரிவான பி40 மக்களுக்கான திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் விகிதம், 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு இந்த சிறப்புத் திட்டத்தின் வழி பயனடைய முடியும் என டாக்டர் சுப்ரா நம்பிக்கைத் தெரிவித்தார்.
அரசாங்க அனுமதி கிடைத்தவுடன் இந்த முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான முழு விவரங்கள் பின்னர் விரிவாக வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.