யாங்கூன் – மியன்மார் நாட்டில், சிறுபான்மை மக்களான ரோஹின்யா முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுவதால், அங்கிருந்து தப்பிச் சென்ற சுமார் 400,000 ரோஹின்யா முஸ்லிம்கள், வங்காள தேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இந்நிலையில், மியன்மார் செய்யும் இக்குற்றங்களுக்கு, தக்க தண்டனை வழங்கப்படும் என அல்கொய்தா தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்கொய்தா அமைப்பு தனது இணையதளத்தில் அண்மையில் விடுத்திருக்கும் அறிக்கையில், “மியன்மாரில் எங்களது இஸ்லாம் சகோதரர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தை அந்நாட்டு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது இஸ்லாம் சகோதரர்கள் அடைந்த அதே துன்பத்தை மியன்மாரும் அடையும்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும், வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒன்று பட்டு, மியன்மாரில் துன்பம் அனுபவித்து வரும் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அல்கொய்தா கோரிக்கை விடுத்திருக்கிறது.