கோலாலம்பூர் – தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மலேசியா வந்திருக்கிறார்.
மலேசியாவில் அத்திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
இந்நிலையில், நேற்று தலைநகரில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஷாலுடன், ஊடகங்களும், மலேசியக் கலைஞர்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அச்செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், துப்பறிவாளன் திரைப்படத்தைப் பற்றி மட்டுமின்றி, பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன் படி, மலேசியாவில் மிக விரைவில் கலைவிழா ஒன்றை ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், அது நட்சத்திரக் கிரிக்கெட் போலோ அல்லது கலைஞர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சி போலவோ இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில், நிச்சயமாக ரஜினி, கமல் கலந்து கொள்வார்கள் என்றும் விஷால் குறிப்பிட்டார்.
இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்கத்துடன், மலேசியக் கலைஞர்கள் சார்பில், மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கம் மற்றும் மஇகா இளைஞர் பிரிவின் கலை மற்றும் கலாச்சாரப் பணியகத்தின் தலைவர் விஜய் எமர்ஜென்சி, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை பரிமாறிக் கொண்டார்.
இதன் மூலம், மலேசியக் கலைஞர்களுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாக இணைந்து பணியாற்றவும், ஒருவருக்கொருவர் பல்வேறு உதவிகளைச் செய்து கொள்ளவும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.