சீரடி (இந்தியா) – நாள்தோறும் சுமார் 60,000 பக்தர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்து சீரடி (Shirdi) சாய்பாபாவின் ஆலயத்தை தரிசிக்க சீரடி என்ற நகரில் குவிகின்றனர்.
சீரடி சாய்பாபாவின் சமாதி அமைந்திருக்கும் உலகப் புகழ் பெற்ற சீரடிக்கு செல்வதென்றால், மும்பை நகரிலிருந்து சில மணி நேரப் பயணம் செல்ல வேண்டும். மும்பை நகரிலிருந்து சுமார் 238 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது சீரடி. இதனால், மும்பை நகர் வந்தடைந்து அங்கிருந்து சீரடிக்கு வந்து செல்ல ஒரு நாள் ஆகிவிடும்.
இனி அந்தப் பிரச்சனை இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை (1 அக்டோபர் 2017) இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் சீரடியில் அமைந்துள்ள புத்தம் புதிய விமான நிலையத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந்திய அதிபரின் தனி விமானம் சீரடியில் தரையிறங்கும் முதல் விமானமாக அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து வணிக ரீதியிலான விமானப் பயணங்கள் தொடங்கப்பட்டு அன்று மாலையே முதல் விமானம் மும்பை நகரை சென்றடைந்தது.
தொடர்ந்து இந்தியாவின் மற்ற நகர்களில் இருந்து விமானப் பயணங்கள் சீரடிக்கு இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீரடி சாய்பாபா ஆலயத்திற்கு நாள்தோறும் வருகை தரும் 60 ஆயிரம் பக்தர்களில் சுமார் 10 முதல் 12 சதவீதத்தினர் இனி விமானங்கள் மூலம் வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சீரடி விமான நிலையத்தின் தொடக்க விழாக் காட்சிகளையும், விமான நிலையத்தின் தோற்றங்களையும் இங்கே காணலாம்.